அடுத்த போட்டியில் இதை பன்னாதீங்க! ஆர்சிபிக்கு அட்வைஸ் கொடுத்த கேன் வில்லியம்சன்!
குஜராத் அணிக்கு எதிரான தோல்விக்கு பிறகு பெங்களூர் செய்த தவறுகளை சுட்டிக்காட்டி இனிமேல் இது போன்று செய்யவேண்டாம் என முன்னாள் கேப்டன் கேன் வில்லியம்சன் அறிவுரை வழங்கியிருக்கிறார்.

பெங்களூர் : இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் தொடர்ச்சியாக இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளி விவர பட்டியலில் முதலிடத்தில் இருந்த பெங்களூர் அணி ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்யும் நோக்கத்துடன் நேற்று குஜராத் அணியை எதிர்கொண்டது. பெங்களூருவில் உள்ள எம். சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் பெங்களூரு (ஆர்சிபி) அணி குஜராத் டைட்டன்ஸ் (ஜிடி) அணியிடம் 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியைச் சந்தித்தது.
ஆர்சிபி அணியால் 20 ஓவர்களில் 169/8 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது, அதைத் தொடர்ந்து ஜோஸ் பட்லரின் அதிரடியான ஆட்டமிழக்காத 73 ரன்கள் மற்றும் சாய் சுதர்சனின் 49 ரன்கள் உதவியுடன் குஜராத் அணி 17.5 ஓவர்களில் இலக்கை எளிதாக எட்டி வெற்றியை பதிவு செய்தது. இதன் காரணமாக தோல்வியை சந்தித்த பெங்களூர் புள்ளி விவர பட்டியலில் முதல் இடத்தில் இருந்து மூன்றாவது இடத்திற்கு சென்றது.
இதனையடுத்து பெங்களூர் அணி செய்த தவறுகளை சுட்டிக்காட்டி நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் கேன் வில்லியம்சன் ஜியோ ஹாட்ஸ்டாரில் “மேட்ச் சென்டர் லைவ்” நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது சில விஷயங்களை பேசிய அறிவுரை வழங்கியிருக்கிறார். இது குறித்து அவர் பேசுகையில் ” ஐபிஎல் போட்டிகளில், குறிப்பாக பெங்களூரு மற்றும் ஹைதராபாத் போன்ற மைதானங்களில் பெரிய ஸ்கோர்களை எட்டுவது ஒரு பொதுவான போக்கவே மாறி வருகிறது. எனவே, இந்த சூழலில் இந்த மாதிரியான மைதானங்களில் விளையாடப்போகிறோம் என்றாலே ஒரு அணி தங்களுடைய கவனத்தில் எப்படி விளையாடப்போகிறோம் என்பதை திட்டமிடவேண்டும்.
இந்த மாதிரி மைதானத்தில் விளையாடும் போது முக்கியமான விஷயமாக இருக்கவேண்டியது என்னவென்றால், பார்ட்னர்ஷிப்பை கட்டமைப்பதுதான். இந்த போட்டியில் அதனை பெங்களூர் செய்ய தவறியது தான் எனக்கு தவறாக தோணுகிறது. போட்டியில் ஆரம்பத்தில் மூன்று விக்கெட்டுகளை விரைவாக இழந்தது. விக்கெட் இழந்த பிறகு உடனடியாக அதிரடியாக விளையாட வேண்டும் என்று அவசியம் இல்லை ஒரு பக்கம் ஒருவர் அதிரடியாக விளையாடினாலும் மற்றொரு பக்கம் இன்னொருவர் அவருக்கு நிதானமாக சப்போர்ட் கொடுக்கவேண்டும்.
கொஞ்சம் கடினமாக 10 ஓவர்கள் வரை விக்கெட் விடாமல் அடுத்த கடைசி 10 ஓவர்களில் நிச்சியமாக அதிகமாக ரன்கள் அடிக்க முடியும்.ஒரு ஓவருக்கு 14 ரன்கள் அல்லது அதற்கு மேல் எடுக்கும் திறன் இருந்தால் நேற்று போட்டி வேறுமாதிரி சென்றிருக்கும். பெங்களூர் அணிக்கு நான் சொல்லி கொள்வது என்பது ஒரே ஒரு விஷயம் தான். விக்கெட் தொடர்ச்சியாக விட்டாலும் கூட இந்த முறை செய்த மாதிரி பார்ட்னர்ஷிப் அமைக்காமல் விட்டுவிட கூடாது. முடிந்த அளவுக்கு விக்கெட் விடாமல் விளையாட முயற்சிக்க வேண்டும் ‘எனவும் கேன் வில்லியம்சன் அறிவுரை வழங்கியுள்ளார்.