கருப்பினத்தவரை ஒதுக்குகிறாதா தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் வாரியம் ..? குவியும் எதிர்ப்புகள் !
சென்னை : தென்னாபிரிக்கா கிரிக்கெட் அணியில் இட ஒதுக்கீடு கொள்கை நீண்ட காலமாக இருந்து வருகிறது, தற்போது இது தவறியதால் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் வாரியம் மீது கடும் எதிர்ப்பு குவிந்து வருகிறது.
தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணியில் கருப்பின கிரிக்கெட் வீரர்களுக்கும் இட ஒதுக்கீடு கொள்கை பின்பற்றப்பட்டு வருகிறது. இதே போல சமுதாயத்தில் பாதிக்கப்பட்டிருக்கும் நபர்கள் மீண்டு வர இட ஒதுக்கீடு கொள்கை பல்வேறு நாடுகளிலும், பல்வேறு துறைகளிலும் இருக்கிறது இல்லாத இடங்களிலும் அமல்படுத்தப்பட்டும் வருகிறது. ஒடுக்கப்பட்ட சமுதாயத்திலிருந்து பலரும் முன்னேற வேண்டும் என்பதற்காக இவ்வாறு இட ஒதுக்கீடு கொள்கை இருக்கிறது.
தென்னாப்பிரிக்காவில் அதிக அளவில் கருப்பின மக்கள் இருப்பதால், நிறவெறியின் காரணமாக கிரிக்கெட் விளையாட்டில் கலந்து கொள்ள பல தடைகள் இருந்து வந்தது. அந்த சமயத்தில் நெல்சன் மண்டேலா போன்ற தலைவர்களால் பல சமூக மாற்றங்கள் உருவானது. அதில் ஒன்று தான் தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணியில் வெள்ளையர் அல்லாத 6 பேர் அணியில் இடம்பெற வேண்டும் என்ற இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டது. அதிலும் குறிப்பாக 2 கருப்பின வீரர்கள் இருக்க வேண்டும் என்ற இட ஒதுக்கீடு கொள்கை அமலுக்கு வந்தது.
அதன் அடிப்படையில் தென்னாபிரிக்கா அணியில் விளையாடிய முதல் கருப்பின வீரர் தான் மகாயா ந்தினி. அவரை தொடர்ந்து நிறைய வீரர்கள் கருப்பினத்தவர்களிலிருந்து வந்து விளையாடியுள்ளனர். தற்போது தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் வாரியமானது டி20 உலகக்கோப்பைக்கான அணியை வெளியிட்டது. அதில் ககிஸோ ரபாடவை தவிர வேறு எந்த ஒரு கருப்பினத்தவரும் அணியில் இடம் பெறாததால், உலகம் முழுவதிலுமிருந்து பெரும் எதிர்ப்பானது தென்னாபிரிக்கா கிரிக்கெட் வாரியம் மீது எழுந்தது.
அதிலும், முன்னாள் ஐசிசி தலைவரான ரே மாலி வெளியிட்டுள்ள கருத்தில், இட ஒதுக்கீடு கொள்கையை பின்பற்றாததன் மூலம் கருப்பின மக்களுக்கு துரோகம் செய்யப்பட்டிருப்பதாகவும் நாட்டின் ஒற்றுமையை நிலைநாட்ட திறமை வாய்ந்த கருப்பினவீரர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும், லுங்கி எங்கிடி என்ற கருப்பின வீரர் தென்னாபிரிக்கா அணியில் ரிசர்வ் வீரராக சேர்க்கப்பட்டிருப்பதாகவும், அவர் முக்கிய அணியில் மட்டும் தான் இடம்பெறவில்லை என்றும் தென்னாபிரிக்கா தலைமை பயிற்சியாளர் ராப் வால்டர் எழுந்த எதிர்ப்புகளுக்கு விளக்கமளித்திருந்தார்.