அப்செட் ஆன தினேஷ் கார்த்திக்!இந்திய கேப்டன் ரோகித் சர்மா ஓபன் டாக் …
இந்திய கேப்டன் ரோகித் சர்மா தினேஷ் கார்த்திக்கை ஏழாவது வரிசையில் களமிறங்கச் சொன்னதில் அவர் அப்செட் ஆனார் என்று தெரிவித்துள்ளார்.
இந்தியா, இலங்கை, பங்களாதேஷ் அணிகள் இடையேயான டி20 கிரிக்கெட் போட்டி கொழும்பு பிரேமதாசா ஸ்டேடியத்தில் நடந்து வந்தது. லீக் சுற்று முடிவில் இந்தியாவும், பங்களாதேஷூம் ஃபைனலுக்கு முன்னேறின. இந்த அணிகளுக்கு இடையிலான இறுதிப்போட்டி நேற்று நடந்தது. டாஸ் வென்ற இந்திய அணி, பங்களாதேஷை பேட்டிங் செய்யப் பணித்தது. இதையடுத்து அந்த அணி, 8 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் சபீர் ரகுமான் அதிகப்பட்சமாக 77 ரன்கள் எடுத்தார். இந்திய தரப்பில் சேஹல் 3 விக்கெட்டும், உனட்கட் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
பின்னர் ஆடிய இந்திய அணி, கடைசிக்கட்டத்தில் தடுமாறியது. போட்டி கைவிட்டுப் போய்விடும் என்ற நிலையில், தினேஷ் கார்த்திக் அதிரடியாக விளையாடி இந்திய அணியை வெற்றிபெற வைத்தார். ஆட்ட நாயகன் விருது தினேஷ் கார்த்திக்கிற்கும் தொடர் நாயகன் விருது வாஷிங்டன் சுந்தருக்கும் வழங்கப்பட்டது.
பின்னர் பேசிய இந்திய கேப்டன் ரோகித் சர்மா, ‘இந்த போட்டியில் தினேஷ் கார்த்திக் சிறப்பாக விளையாடினார். அவரிடம், ‘இந்தப் போட்டியில் நீங்கள்தான் ஆட்டத்தை முடிக்க வேண்டும். கடைசி 4 ஓவர்களில் உங்கள் திறமை பயன்படும்’ என்றேன். ஏழாவது வரிசையில் களமிறங்கச் சொன்னேன். அதனால்தான் நான் அவுட் ஆனதும் அவர் இறங்க வேண்டிய இடத்தில் விஜய் சங்கர் இறங்கினார். இப்படி செய்ததில் தினேஷுக்கு வருத்தம் இருந்தது. அவர் அப்செட்டாகிவிட்டார். ஆனால், இந்த வெற்றியின் மூலம் அவர் மகிழ்ச்சியடைந்திருக்கிறார். அவரது ஆட்டம் அவருக்கு இன்னும் நம்பிக்கையை அளித்திருக்கும்.
கடைசி ஓவரில் விஜய் சங்கர் அவுட்டானதும் போட்டி டிராவாகி, சூப்பர் ஓவர் நடக்கும் என நினைத்தேன். அதற்கும் தயாரும் ஆகிவிட்டேன். காலில், பேடை கட்டத் தொடங்கிவிட்டேன். அதனால் கடைசிப் பந்தை பார்க்கவில்லை. திடீரென்று டிரெஸ்சிங் ரூமில் கொண்டாட்டம் ஆரம்பமாகிவிட்டது. பிறகுதான் தினேஷ் கார்த்திக் சிக்சர் அடித்திருக்கிறார் என்று புரிந்துகொண்டேன். விஜய் சங்கர், இந்த தொடரில் பேட்டிங்கில் இறங்கவில்லை. அவருக்கு அதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. அதனால் இந்தப் போட்டியின் கடைசியில் அவருக்கு அழுத்தம் இருந்தது. அந்த நேரத்தில் களத்தில் நிற்பது எளிதான விஷயமில்லை. இந்தப் போட்டியின் மூலம் அவர் கற்றுக்கொண்டிருப்பார் என நினைக்கிறேன்’ என்றார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.