கடைசி டெஸ்ட் முடிந்த பிறகு ஓய்வா? மனம் திறந்த ரோஹித் சர்மா!
இந்தியா-ஆஸ்திரேலியா தொடருக்கு பிறகு ஓய்வு பெறுவதாக பரவும் தகவலுக்கு ரோஹித் சர்மா மறுப்பு தெரிவித்து தெளிவான விளக்கத்தை அளித்துள்ளார்.
சிட்னி : இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் சமீபத்திய டெஸ்ட் பார்ம் மோசமாக இருப்பதால் அவர் மீது கடுமையான விமர்சனங்கள் கொட்டப்பட்டது என்றே கூறலாம். இது ஒரு புறம் இருக்க மற்றோரு பக்கம் சிட்னியில் தற்போது நடைபெற்று வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5-வது டெஸ்ட் போட்டி முடிந்த பிறகு ரோஹித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாகவும் தீயான ஒரு தகவல் பரவியது.
இந்த சூழலில், 5-வது டெஸ்ட் போட்டியிலும் ரோஹித் விளையாடவில்லை அவருக்கு பதிலாக அணியில் சுப்மன் கில் விளையாடி வருகிறார். கேப்டனாக பும்ரா செயல்பட்டு வருகிறார். கடைசி போட்டி மிகவும் முக்கியமான போட்டி எனவே, இந்த போட்டியில் ரோஹித் சர்மாவை எடுக்கவில்லை என்பதால் கிட்டத்தட்ட அவர் ஓய்வு பெறுவது உறுதி தான் எனவும் சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டு வந்தது.
இதனையடுத்து இவை அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டி கொடுத்த ரோஹித் நான் ஓய்வு பெற முடிவு எடுக்கவில்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் ” மீடியாவில் நான் ஓய்வு பெறுவதாக வெளிவரும் தகவல் எதுவும் உண்மை இல்லை. அவர்கள் என்னவேண்டுமானாலும் எழுதுவார்கள். நான் இப்போது சிட்னி போட்டியில் இருந்து மட்டும் தான் விலகி இருக்கிறேன்.
நான் பேட்டிங்கில் தொடர்ந்து ரன் எடுக்காததால் இறுதி டெஸ்ட் போட்டியில் இருந்து ஒதுங்கி இருக்க வேண்டும் என எனக்கு தோன்றியது. எங்களுக்கு இது முக்கியமான போட்டி என்பதால் அணிக்கு என்ன தேவை என்பதுதான் எனது முன்னுரிமையாக இருந்தது. அதன் காரணமாக தான் கடைசி போட்டியில் நான் விளையாடவில்லை விலகி இருக்கிறேன்.
மற்றபடி, இப்போது டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதற்கு எண்ணமில்லை. எப்போது ஓய்வுப் பெற வேண்டும் என்பதை நான் தான் முடிவு செய்ய வேண்டும். அடுத்த 5 மாதங்களில் என்ன நடக்கும் என்பது யாருக்கும் தெரியாது. ஆனால், அதற்கு இடையில் இருக்கும் போட்டிகளில் எப்படி கவனமாக விளையாடவேண்டும் என்பதை மட்டும் தான் நான் என்னுடைய கவனத்தில் எடுத்துக்கொள்வேன்” எனவும் ரோஹித் சர்மா தெரிவித்தார்.