நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட டெல்லி பயிற்சியாளர்! எச்சரிக்கை கொடுத்து அபராதம் போட்ட பிசிசிஐ!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் நடுவருடன் டெல்லி பயிற்சியாளர் முனாஃப் படேல் வாக்குவாதம் செய்த காரணத்தால் அவருக்கு பிசிசிஐ அபராதம் விதித்தித்துள்ளது.

டெல்லி : நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடரில் டெல்லி அணியும் ராஜஸ்தான் அணியும்மோதியது . இந்த போட்டி சூப்பர் ஓவர் வரை சென்று டெல்லி அணி கடைசி நேரத்தில் வெற்றிபெற்றது. போட்டியில், டெல்லி கேபிடல்ஸ் அணியின் பயிற்சியாளரான முனாஃப் படேல், ஆட்டத்தின் போது நடுவருடன் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக பிசிசிஐ-யின் கண்டனத்தையும் நடவடிக்கையையும் எதிர்கொண்டுள்ளார். டெல்லி கேபிடல்ஸ் அணி எதிரணியுடன் விறுவிறுப்பான ஆட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது, நடுவரின் முடிவு ஒன்று முனாஃப் படேலுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியதாக தெரிகிறது.
இதன் காரணமாக டென்ஷனான அவர் நடுவருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்த வாக்குவாதம், ஆட்டத்தின் ஒழுங்கை பாதித்ததுடன், மைதானத்தில் உள்ள மற்ற வீரர்கள் மற்றும் ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தது. முனாஃப் படேலின் இந்த நடவடிக்கை, ஐபிஎல்-ன் நடத்தை விதிமுறைகளை மீறுவதாக பிசிசிஐ கருதி அவருக்கு அபராதத்தையும் விதித்தது. பிசிசிஐ-யின் நடத்தை விதிகளின்படி, வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் நடுவர்களின் முடிவுகளை மதிக்க வேண்டும், மற்றும் எந்தவொரு மோதலும் ஏற்படுத்தப்படக் கூடாது.
அப்படி மீறினால் அதற்கு நடவடிக்கையாக போட்டியில் விளையாட தடை விதிப்பது முதல் அபராதம் தொகை விதிக்கும் வரை விதிமுறைகள் உள்ளது. எனவே, அதன் அடிப்படையில் அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இனிமேல் இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது எனவும், அவருக்கு பிசிசிஐ எச்சரிக்கை விடுத்துள்ளது. அதே சமயம் டெல்லி கேபிடல்ஸ் அணி நிர்வாகம் இந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்துள்ளது.
முனாஃப் படேலின் செயல், அணியின் பெயரை சற்று பாதித்தாலும், அவர் தனது தவறை உணர்ந்து மன்னிப்பு கோரியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அணியின் தலைமை பயிற்சியாளர் மற்றும் கேப்டன், இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க உரிய நடவடிக்கைகளை எடுப்பதாக உறுதியளித்துள்ளனர். இருப்பினும், என்ன காரணத்துக்காக அவர் நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் என்கிற சரியான தகவல் இதுவரை வெளியாகவில்லை. அவர் வாக்குவாதம் செய்த வீடியோ தான் வைரலாகி கொண்டு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.