#CSKvDC: தடுமாறிய சென்னை, அரைசதம் விளாசிய ரெய்னா.. டெல்லி அணிக்கு 189 ரன்கள் இலக்கு!
ஐபிஎல் தொடரின் இரண்டாம் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்-டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதி வரும் நிலையில், சென்னை அணியின் சுரேஷ் ரெய்னா, சாம் கரணின் அதிரடி ஆட்டத்தால் டெல்லிக்கு 189 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
2021 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் நேற்று தொடங்கியது. முதல் போட்டியில் பெங்களூர் அணி, அதிரடியாக வெற்றி பெற்றதை தொடர்ந்து இன்று இரண்டாம் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதி வருகிறது.
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிட்டல்ஸ் அணி, பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரராக ருதுராஜ் கெய்க்வாட்–டு பிளெசிஸ் களமிறங்கினார்கள். சென்னை அணி 7 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில், 1.4 ஆம் ஓவரில் ஆவேஸ் கான் வீசிய பந்தில் ஒரு ரன் கூட எடுக்காமல் டு பிளெசிஸ் தனது விக்கெட்டை இழந்தார்.
அவரைதொடர்ந்து 5 ரன்கள் எடுத்து ருதுராஜ் வெளியேற, அதிரடியாக ஆடிவந்த மொயின் அலி 36 ரன்களில் வெளியேறினார். பின்னர் ரெய்னாவுடன் ராயுடு இணைந்தார். இருவரும் நிதானமாக அடிவர, 23 ரன்களில் ராயுடு வெளியேறினார். 54 ரன்கள் எடுத்து சுரேஷ் ரெய்னா வெளியேற, பின்னர் களமிறங்கிய தல தோனி ஒரு ரன் கூட அடிக்காமல் ரசிகர்களை ஏமாற்றினார்.
அவரையடுத்து ஜடேஜா-சாம் கரண் கூட்டணி களமிறங்க, இருவரும் அதிரடியாக இறுதிவரை ஆடி அணியின் ஸ்கொரை உயர்த்தினார்கள். இறுதியாக சென்னை அணி, 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் எடுத்தது. 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கவுள்ளது.