#SLvIND: தீபக் சாஹர் காட்டடி.., இலங்கையை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றிய இந்திய அணி ..!

இந்திய அணி 49.1 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 277 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. இன்று இரு அணிகளுக்கும் இடையே 2-வது ஒருநாள் போட்டி கொழும்பில் உள்ள ஆர்.பிரமதாச மைதனத்தில் நடைபெற்றது.
அதன்படி, டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்டை இழந்து 275 ரன்கள் எடுத்தனர். இந்திய அணியில் சாஹல், புவனேஷ்வர் குமார் தலா 3, தீபக் சாஹர் 2 விக்கெட்டை பறித்தனர். 276 ரன்கள் இலக்குடன் இந்திய அணியில் தொடக்க வீரராக பிருத்வி ஷா , தவான் இருவரும் களமிறங்கினார். ஆனால் ஆட்டம் தொடக்கத்திலேயே பிருத்வி ஷா 13 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
பின்னர் களமிறங்கிய இஷன் கிஷன் ஒரு ரன் எடுத்து விக்கெட்டை இழக்க அடுத்த சில நிமிடங்களில் தவான் 29 ரன்னில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இதைத்தொடர்ந்து மனிஷ் பாண்டே, சூர்யகுமார் யாதவ் இருவரும் கூட்டணி அமைத்து அணியின் எண்ணிக்கையை சற்று உயர்த்தினர். மணிஷ் பாண்டே 37 ரன்னிலும், ஹர்திக் பாண்டியா வந்த வேகத்தில் ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினார்.
அதிரடியாக விளையாடி வந்த சூர்யகுமார் யாதவ் அரை சதம் விளாசி 53 ரன்கள் எடுத்தார். பின் சிறப்பாக விளையாடிய குருனல் பாண்டியா 35 ரன்னில் வெளியேறினார். இதனால் இந்திய அணி இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டது. பின்னர் எட்டாவது வரிசையில் இறங்கிய தீபக் சாஹர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இதனால் இந்திய அணி 49.1 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 277 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தீபக் சஹர் கடைசி வரை களத்தில் 69* ரன்களுடன் இருந்தார். அதில் 7 பவுண்டரி ஒரு சிக்சர் அடங்கும். 3 ஒருநாள் போட்டியில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றதால் தொடரை கைப்பற்றியது. கடைசி போட்டி வருகின்ற 23-ஆம் தேதி நடைபெறுகிறது.