விவோ ஸ்பான்சர்ஷிப்பை தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடிவு .! .பிசிசிஐ!
சமீபத்தில் இந்திய, சீன எல்லையில் நடைபெற்ற மோதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதையடுத்து, சமூக வலைதளங்களில் சீன பொருள்களை தடைசெய்ய வேண்டும் குரல் ஒங்க தொடங்கியது. இதனால், பாதுகாப்பு கருதி டிக் டாக் உள்ளிட்ட சீன செயலிகளுக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில், சீனாவை தளமாகக் கொண்ட விவோ ஐபிஎல் தலைப்பு ஸ்பான்சர்ஷிப்பை கடந்த 2018 ஆம் ஆண்டில் ரூ .2,199 கோடிக்கு ஐந்தாண்டு ஒப்பந்தம் செய்தது. 13-வது ஐபிஎல் போட்டி செப்டம்பர் 19 முதல் நவம்பர் 10 வரை நடைபெறும் என்று ஐபிஎல் நிர்வாக கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஐபிஎல் போட்டியில் பிசிசிஐ விவோ ஸ்பான்சர்ஷிப்பை நிறுத்தி வைக்குமா..?அல்லது தொடருமா..? என்ற கேள்வி எழுந்த நிலையில், சமீபத்தில் நடைபெற்ற ஐபிஎல் நிர்வாக கூட்டத்தில் இதுகுறித்து பிசிசிஐ எதுவும் கூறவில்லை.
இந்நிலையில், விவோ ஸ்பான்சர்ஷிப்பை தற்காலிகமாக பிசிசிஐ நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளது என ஐ.பி.எல் அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால், இது குறித்து அதிகாரப்பூர்வமாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ) தெரிவிக்கவில்லை.
இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்) இந்தியாவுக்கு வெளியே நடைபெறுவது இது மூன்றாவது முறையாகும். இதற்கு முன்பு 2009 ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடைபெற்றது. அதே போல 2014 ஆண்டு ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்றது. இரண்டு முறையும் மக்களவைத் தேர்தல் காரணமாக நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.