தாதா கங்குலி ஜன.6 ஆம் தேதி டிஸ்சார்ஜ் – மருத்துவமனை
பிசிசிஐ தலைவரும், இந்தியாவின் முன்னாள் கேப்டனுமான சவுரவ் கங்குலி ஜன.6 ஆம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஜனவரி 2-ஆம் தேதி நெஞ்சுவலி காரணமாக கொல்கத்தாவில் உள்ள உட்லேண்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் கங்குலி இதயத்தில் இரண்டு அடைப்புகள் உள்ளது என்றும் ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது எனவும் தெரிவிக்கப்பட்டது. இதனிடையே, கங்குலி விரைவில் மீண்டு வரவேண்டும் என்று சமூக வலைதளங்களில் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், லேசான மாரடைப்பால் பாதிக்கப்பட்ட சவுரவ் கங்குலி வரும் 6-ஆம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஒன்பது பேர் கொண்ட மூத்த மருத்துவர்கள் குழு இன்று கங்குலியின் உடல்நிலை குறித்து ஆலோசனை மேற்கொண்டனர். இதில், பிரபல இருதயநோய் டாக்டர் தேவி ஷெட்டி மற்றும் டாக்டர் ஆர்.கே.பாண்டா ஆகியோர் மெய்நிகர் தளம் மூலம் கூட்டத்தில் பங்கேற்றனர்.
கங்குலிக்கு தற்போது நெஞ்சுவலி இல்லை மற்றும் சரியான நிர்வாகத்தில் இருப்பதால் ஆஞ்சியோபிளாஸ்டியைத் தள்ளிவைப்பது ஒரு பாதுகாப்பான வழி என்று மருத்துவ வாரியம் ஒருமித்த கருத்துக்கு வந்துள்ளது. ஆஞ்சியோபிளாஸ்டி சில நாட்களில் அல்லது வாரங்களில் நிச்சயம் நடக்கும். நாளை மறுநாள் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று தெரிவித்துள்ளனர். மருத்துவர்கள் கங்குலின் உடல்நிலை குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பின்னர் அவரது வீட்டில் தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளனர்.