CWG2022: ஆஸ்திரேலியாவிடம் 3 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா தோல்வி!
காமன்வெல்த் விளையாட்டு 2022 தொடக்க ஆட்டத்தில் இந்தியா ஆஸ்திரேலியாவிடம் 3 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி.
பர்மிங்ஹாமில் நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டு 2022 போட்டிகளில் முதன் முதலாக அறிமுகமாகியுள்ள மகளிர் கிரிக்கெட் டி20 போட்டியில் நேற்று ஆஸ்திரேலியா அணி, இந்திய மகளிர் அணியை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. ட்ஜ்பாஸ்டனில் நடந்த மகளிர் டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய இந்திய மகளிர் அணி, 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 154 ரன்களை எடுத்தது. இதில் அதிகபட்சமாக அபாரமாக விளையாடிய ஷபாலி வர்மா 48, கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 52 ரன்கள் எடுத்தனர். ஆஸ்திரேலியா தரப்பில் ஜெஸ் ஜொனாசென் 4 விக்கெட்டுகளைக் வீழ்த்தினார்.
இதனைத்தொடர்ந்து, 155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது. தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய ஆஸ்திரேலிய அணி, 49/5 என்று மோசமான நிலையில் இருந்தது. இந்திய பந்துவீச்சாளர் ரேணுகா சிங் அபாரமாக பந்து வீசி 18 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளைச் வீழ்த்தி ஆஸ்திரேலியா டாப் ஆர்டரை நிலைகுலையச் செய்தார். ஆனால், இதன்பிறகு தோல்வியில் இருந்து படிப்படியாக மீண்டு அந்த அணியை ஆஷ்லி கார்ட்னர் 52, கிரேஸ் ஹாரிஸ் 37 என ரன்களை அடித்து, 7 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது.
ஆரம்பத்தில் ஆஸ்திரேலிய மகளிர் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகள் இழக்க, இந்திய அணியே வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடைசியில் அதிரடியாக விளையாடி ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது இந்தியர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.