CWC23: 2023 ஐசிசி உலகக்கோப்பை தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிப்பு!

Pakistan team wc

2023  ஐசிசி தொடரான ஒருநாள் உலக கோப்பை தொடர் இம்முறை இந்தியாவில் நடைபெற உள்ளது. இந்தியாவில் அக்.5ம் தேதி முதல் நவம்பர் 19ம் தேதி வரை நடைபெற உள்ள 50 ஓவர் உலகக்கோப்பை தொடரில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, இலங்கை, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொள்கின்றன. அக்டோபர் 5ம் தேதி நடைபெற உள்ள உலகக்கோப்பை தொடரின் தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகள் அகமதாபாத்தில் நரேந்திர மோடி மைதானத்தில் மோத உள்ளன.

இந்திய அணி தனது முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவை அக்டோபர் 8ம் தேதி சென்னையில் எதிர்கொள்கிறது. உலக கோப்பை தொடருக்காக இந்தியா உள்ளிட்ட அனைத்து கிரிக்கெட் அணிகளும் தயாராகி வரும் நிலையில், இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட அணிகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், 2023 ஐசிசி உலகக்கோப்பை தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. பாபர் ஆசாம் தலைமையிலான 15 பேர் கொண்ட அணியை அறிவித்துள்ளது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்.

காயம் காரணமாக அந்த அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் நசீம் ஷா இடம்பெறவில்லை என்பது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. இதனால் பந்துவீச்சில் பலம் வாய்ந்த பாகிஸ்தான் அணி சற்று பின்னடைவை சந்தித்துள்ளது. வேகப்பந்து வீச்சாளர் நசீம் ஷா ஆசிய கோப்பையில் காயம் ஏற்பட்டதை தொடர்ந்து, உலகக்கோப்பையில் இடம்பெறவில்லை. அவருக்கு பதிலாக ஹசன் அலி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

பாகிஸ்தான் தனது 2வது உலகக் கோப்பை பட்டத்தை வெல்ல முனைப்பில் உள்ளது. ஆனால் திறமையான வேகப்பந்து வீச்சாளர் இல்லாமல் இப்போது போட்டிக்கு செல்ல உள்ளது. இருப்பினும், பாகிஸ்தான் அணியில் போதுமான அனுபவம் வாய்ந்த வீரர்கள் உள்ளன. பேட்டிங் முன்னணியில் பாபருக்கு ஆதரவாக ஃபகார் ஜமான், இமாம்-உல்-ஹக், முகமது ரிஸ்வான், இப்திகார் அகமது மற்றும் சல்மான் ஆகியோர் உள்ளனர். இளம்வீரரான முகமது ஹரிஸ் மற்றும் மிடில் ஆர்டர் பேட்டர் சவுத் ஷகீல் ஆகியோர் உள்ளனர்.

ஷதாப் கான் மற்றும் முகமது நவாஸ் ஆகிய இரு சுழல் பந்துவீச்சு ஆல்-ரவுண்டர்களுடன் பாகிஸ்தான் அணி உள்ளது. சல்மான் ஆகா மற்றும் இப்திகார் அகமது ஆகியோர் சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டர்களாகவும் உள்ளனர். தேவை ஏற்பட்டால் உசாமா மிர் மற்றொரு லெக் ஸ்பின்னராக பாகிஸ்தான் அணி பயன்படுத்த வாய்ப்பு உள்ளது. பாகிஸ்தானின் புகழ்பெற்ற வேகப்பந்து வீச்சுக்கு ஷாஹீன் ஷா அப்ரிடி தலைமை தாங்குவார். அவருக்கு ஆதரவாக ஹரிஸ் ரவூப், முகமது வசீம் மற்றும் ஹசன் அலி ஆகியோர் இருப்பார்கள்.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு முன்னதாக, பாகிஸ்தான் அணி நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இரண்டு பயிற்சி ஆட்டங்களில் விளையாடுகிறது. எனவே உலகக்கோப்பை தொடரில் அக்டோபர் 6 ஆம் தேதி ஹைதராபாத்தில் நெதர்லாந்துக்கு எதிராக பாகிஸ்தான் அணி களமிறங்குகிறது. பாகிஸ்தான் சமீபத்தில் ஆசிய கோப்பையில் இடம்பெற்றது. ஆனால் இறுதிப்போட்டிக்கு முன்னேற முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உலகக் கோப்பைக்கான பாகிஸ்தான் அணி: பாபர் ஆசாம் (c), ஷதாப் கான், ஃபகார் ஜமான், இமாம்-உல்-ஹக், அப்துல்லா ஷபீக், முகமது ரிஸ்வான், சவுத் ஷகீல், இப்திகார் அகமது, சல்மான் அலி ஆகா, முகமது நவாஸ், உசாமா மிர், ஹாரிஸ் ரவுஃப், ஹசன் அலி, ஷாஹீன் அப்ரிடி, முகமது அப்ரிடி வாசிம் ஆகியோர் உள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்