PAKvNZ : முடிஞ்சா தொட்டுப்பார்! பாகிஸ்தானுக்கு 321 ரன்கள் இலக்கு! மிரட்டிய நியூசிலாந்து!
சாம்பியன்ஸ் டிராபியின் முதல் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 320 ரன்கள் எடுத்துள்ளது.

கராச்சி : சாம்பியன்ஸ் டிராபிக்கான ஒருநாள் கிரிக்கெட் தொடரை இன்று முதல் தொடங்கியுள்ளன. முதல் போட்டியில் முகமது ரிஸ்வான் தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை மிட்செல் சாண்ட்னர் தலைமையிலான நியூசிலாந்து அணி எதிர்கொண்டு விளையாடி வருகிறது. இப்போட்டி கராச்சி மைதானத்தில் பிற்பகல் 2.30 மணியளவில் தொடங்கியது.
இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் முகமது ரிஸ்வான் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதனை தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து அனியின் தொடக்க வீரர் வில் யங் 113 பந்துகளை எதிர்கொண்டு 12 பவுண்டரி 1 சிக்ஸர் என 107 ரன்கள் விளாசி, சாம்பியன்ஸ் டிராபி 2025-ன் முதல் போட்டி முதல் இன்னிங்ஸிலேயே சதம் விளாசி அசத்தினார்.
நியூசிலாந்து வீரர் டெவன் கான்வே 10 ரன்னிலும், கேன் வில்லியம்சன் 1 ரன்னிலும், டேரில் மிட்செல் 10 ரன்களிலும் வெளியேறினர். டாம் லாதம் மற்றும் க்ளென் பிலிப்ஸ் அதிரடியாக விளையாடி 179 ரன்களை குவித்தனர். இதில் டாம் லாதம் 104 பந்துகளில் 10 பவுண்டரிகள் 3 சிக்ஸர்கள் விளாசி 118 ரன்கள் எடுத்து சாம்பியன்ஸ் டிராபியில் 2வது சதத்தை பதிவு செய்து இறுதி வரை களத்தில் நின்றார். பிலிப்ஸ் 39 பந்துகளில் 3 பவுண்டரிகள் 4 சிக்ஸர்கள் விளாசி 61 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார் .
இறுதியில் 50 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 5 விக்கெட் இழப்புக்கு 320 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் அணி சார்பில் ஹாரிஸ் ரவுஃப் 2 விக்கெட்டுகளையும், நசீம் ஷா 2 விக்கெட்டுகளையம் , அப்ரார் அகமது ஒரு விக்கெட்டையும் வீழ்த்தி இருந்தனர். தற்போது 50 ஓவர் முடிவில் 321 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களம் காண உள்ளது.