சிஎஸ்கே தொடர் தோல்வி…விமர்சனங்கள் குறித்து மௌனம் கலைத்த அஸ்வின்!
நல்லமுறையில் வரும் விமர்சனங்கள் எப்படியாக இருந்தாலும் நான் ஏற்றுக்கொள்வேன் என சென்னை சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின் தெரிவித்துள்ளார்.

சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எந்த அளவுக்கு மோசமாக விளையாடமுடியுமோ அந்த அளவுக்கு இந்த சீசனில் விளையாடி வருவதாக ரசிகர்களே குமுறிக்கொண்டு வருகிறார்கள். இந்த சீசனில் இதுவரை 5 போட்டிகள் விளையாடியிருக்கும் நிலையில் 4 போட்டியில் தோல்வியை சந்தித்து புள்ளி விவர பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது என்பதால் தான் சென்னை ரசிகர்கள் தங்களுடைய ஆதங்கங்களை கொட்டி வருகிறார்கள்.
அப்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு குறித்து எழுந்துள்ள விமர்சனங்களுக்கு அணியின் சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின் தனது யூடியூப் சேனல் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியீட்டு பேசியிருக்கிறார். இது குறித்து பேசிய அவர் ” நான் எப்போதும் அணிக்கு தேவைப்படும் படி எழும் விமர்சனங்களை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் சிலர் என்னை தாக்கும் போது, அது வெறும் விஷமமாகவே இருக்கிறது, என்னைப்பொறுத்தவரையில் யாருக்கும் தோல்வி பிடிக்காது.
எல்லா சந்தர்ப்பங்களிலும் வெற்றி நிச்சயம் என்று கூறமுடியாது. அதைப்போல, ட்ரோலிங் பற்றி நான் கவலைப்படுவதில்லை. என் பெற்றோர் கூட என்னை திட்டுவார்கள், அது அன்பிலிருந்து வருவதால் பரவாயில்லை. ஆனால் விஷமத்தனமாக பேசுவதை நான் பொருட்படுத்துவதில்லை, என்னைப் பற்றி பேசுபவர்கள், என் குறைகளை சுட்டிக்காட்டுபவர்கள், அது நல்ல எண்ணத்தில் இருந்து வருகிறதா அல்லது விஷமத்தனமாக இருக்கிறதா என்பதை என்னால் எளிதாக புரிந்து கொள்ள முடியும். என் வாழ்க்கையின் மந்திரம் எப்போதும் இன்றை விட சிறப்பாக இருக்க வேண்டும் என்பதே என்னுடைய எண்ணம்” எனவும் அஸ்வின் தெரிவித்தார்.
CSK அணியின் மோசமான ஆட்டம் மற்றும் அஸ்வின் மீதான விமர்சனங்கள் அவரை உணர்ச்சிவசப்படுத்தியிருக்கலாம். ஆனால், அவர் அதை மனதில் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல், அடுத்த போட்டியில் எப்படி சிறப்பாக விளையாடவேண்டும் என்பதில் தான் அவருடைய கவனம் இருப்பது அவருடைய பேச்சின் மூலம் தெரிகிறது. சென்னை அடுத்ததாக வரும் ஏப்ரல் 11-ஆம் தேதி கொல்கத்தா அணியை எதிர்கொள்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.