எந்த பயனும் இல்ல., ரிட்டயர்டு ஆகிடுங்க.., CSK-வில் தோனி மவுசு குறைகிறதா?
13வது ஓவரில் 80/6 என CSK அணி தடுமாறியபோது களமிறங்காத தோனி, 4 ஓவரில் 98 ரன்கள் தேவை என்ற நிலையில் 9வது வீரராக களமிறங்கியது பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது.

சென்னை : நேற்று ஐபிஎல் 2025 போட்டியில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. 17 வருடங்களாக சென்னை சேப்பாக்கத்தில் சென்னை அணியை பெங்களூரு வீழ்த்தியதில்லை என்ற சாதனை நேற்று தகர்க்கப்பட்டது. அதற்கு ரசிகர்கள் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வரும் வேளையில் CSK அணியின் நட்சத்திர வீரர் M.S.தோனி தாமதமான அதுவும் 9வது விக்கெட்டுக்கு களமிறங்கியதும் ஒரு காரணம் என ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.
196 ரன்களை சேஸ் செய்து கொண்டிருந்த CSK அணி அடுத்தடுத்த விக்கெட்டுகளை இழந்து 12.5 ஓவர்களில் 80/6 என்ற நிலையில் தடுமாறிக் கொண்டிருந்தபோது, ரசிகர்கள் தோனி மைதானத்தில் களமிறங்குவார் என்று எதிர்பார்த்தனர். ஆனால், அவருக்கு முன்னதாக ரவிச்சந்திரன் அஷ்வின் களத்திற்கு வந்தது ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றமாக அமைந்தது. தோனி இறுதியாக 15.3 ஓவர்களில் அஷ்வின் அவுட்டான பிறகு, 98 ரன்கள் தேவைப்படும் நிலையில் 9வது வீரராக களமிறங்கினார்.
தோனி 16 பந்துகளில் 3 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் என 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆனால், இதனால் CSK வெற்றிக்கு எந்த பயனையும் தரவில்லை. ஏனெனில் தோனி களமிறங்கும் போது ரன் ரேட் ஒரு ஓவருக்கு 20-க்கு மேல் இருந்தது.
தோனி முன்னதே கூறியிருக்கிறார். தனது உடல்நிலை கருத்தில் கொண்டு தன்னால் நீண்ட நேரம் களத்தில் பேட்டிங் ஆட முடியாது. அதனால் 7வது வீரராக தான் இறங்குவார் என்றும், அதிலும் முன்பு போல 2,3 ரன்கள் எல்லாம் ஓட முடியாது என்று பந்துகளை பவுண்டரிக்கு அனுப்பவே அதிக முயற்சி செய்வார் என்றும் கூறப்பட்டது. இதனை குறிப்பிட்டும் சில ரசிகர்கள் அவர் ஓய்வு பெறுவது நல்லது என்றவாறெல்லாம் பதிவிட ஆரம்பித்துவிட்டனர்.
சமூக ஊடக தளத்தில், “தோனி ஏன் இவ்வளவு தாமதமாக வந்தார்? போட்டி முடிந்த பிறகு கடைசி ஓவரில் சிக்ஸர் அடிப்பதால் என்ன பயன்?”, “9வது இடத்தில் வந்து 28 பந்தில் 98 ரன்கள் எடுக்க முடியாது. பிறகு ஏன் 9வது வீரராக களமிறங்கினார்?” என்றும், கேப்டன் ருதுராஜ் தோனியை முன்னதாக அனுப்பியிருக்க வேண்டும். இது கேப்டனின் தோல்வி என்றும் பல்வேறு பதிவுகள் CSK தோல்வி குறித்து ரசிகர்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.
முன்னாள் இந்திய வீரர் இர்ஃபான் பதான் கூறுகையில், “தோனி 9வது இடத்தில் பேட் செய்வதை நான் ஒருபோதும் ஆதரிக்க மாட்டேன். இது அணிக்கு நல்லதல்ல” என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டார். வர்ணனையாளர் சஞ்சய் பங்கார், “ரன் ரேட் 16-ஐ தாண்டியிருக்கும்போது, 5 விக்கெட்டுகள் விழுந்திருக்கும்போது தோனி களத்திற்கு வந்திருக்க வேண்டும். இது அவரது ரசிகர்களை அவமானப்படுத்துவதாக உள்ளது.” என்று கடுமையாக விமர்சித்தார். ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மைக்கேல் கிளார்க், தோனியின் தாமதமான வருகை CSK-யின் தோல்விக்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்று குறிப்பிட்டார்.
சில கிரிக்கெட் நிபுணர்கள் கூறுகையில், CSK-யின் உத்தி, தோனியை ஒரு பேக்அப் வீரராக பயன்படுத்துவதாக இருக்கலாம். ஆனால் இது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. மிடில் ஓவர்களில் தோனி வந்திருந்தால் RCB-யை வென்றிருக்க வாய்ப்புள்ளது என்று சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
தோனி களமிறங்கியபோது சேப்பாக்கத்தில் வழக்கம் போல 120 டெசிபல் சத்தம் பலரது காதுகளை பதம் பார்த்தது. இது அவரது ரசிகர் பட்டாளத்தின் ஆரவாரத்தை காட்டுகிறது. ஆனால், அவரால் நேற்றைய போட்டியில் பழையபடி ஒரு மேஜிக்கை நிகழ்த்த முடியவில்லை என்பது ரசிகர்களுக்கு ஏமாற்றமாகவே இருந்தது. CSK அணிக்காக 5 ஐபிஎல் கோப்பைகள், பல்வேறு போட்டிகளில் நல்ல ஃபினிஷர், நல்ல விக்கெட் கீப்பர் (தற்போதும்) என பல்வேறு ரெக்கார்டுகள் அவருக்கு சாதகமாக இருந்தாலும் தோனியின் தற்போதைய பேட்டிங் விளையாட்டு திறன் அவரது ரசிகர்களை சற்று அதிருப்தியை தருகிறது என்பதே நிதர்சனமான உண்மை என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.