வெற்றி கோப்பையுடன் இன்று சென்னை வருகிறது சிஎஸ்கே!

chennai champion

ஐபிஎல் வெற்றி கோப்பையுடன் இன்று பிற்பகல் சென்னை வருகிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நேற்று கோலாகலமாக எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற தோனி தலைமையிலான சென்னை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய குஜராத் அணி வீரர்கள் சிறப்பாக விளையாடி, 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் மட்டுமே இழந்து 214 என்ற இமாலய இலக்கை சென்னைக்கு நிர்ணயித்தனர்.

இதன்பின் இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய சென்னை அணியின் தொடக்க வீரர்கள், முதல் 3 பந்துகளில் 4 ரன்கள் அடித்திருந்த நிலையில், மழை குறுக்கிட்டது. இதனால் போட்டி தாமதமாகி, நள்ளிரவு 12.10 மணிக்கு  தொடங்கிய போட்டி மழையால் 15 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இதில், 171 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை தனது ஆதிக்கத்தை செலுத்தியது.

இறுதியில் 2 பந்துகளில் 10 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரி அடித்து  வெற்றியை தேடி தந்தார் ஜடேஜா. இந்த வெற்றியின் மூலம் சென்னை அணி 5வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. சென்னை அணி வெற்றியை தொடர்ந்து கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமின்றி, முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த சமயத்தில், ஐபிஎல் கோப்பையை வென்ற சிஎஸ்கே அணி, சென்னைக்கு எப்போது வரும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில், ஐபிஎல் வெற்றி கோப்பையுடன் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு சென்னை வருகிறது எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ். அகமதாபாத்தில் இருந்து தோனி தலைமையிலான சிஎஸ்கே அணியினர் பிற்பகல் சென்னை வருகின்றனர். சிஎஸ்கே அணி சென்னை வருவதால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்