ஓய்வு பெறப்போகும் தோனி? பயிற்சியாளர் கொடுத்த பதில்..! சிஎஸ்கே ரசிகர்கள் கலக்கம்…
ஐபிஎல் தொடரில் இருந்து தோனி ஓய்வு பெற உள்ளதாக வெளியான தகவலுக்கு பயிற்சியாளர் பிளெமிங் பதில் அளித்துள்ளார்.

சென்னை : நேற்றைய ஐபிஎல் ஆட்டத்தில் டெல்லி அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சென்னை அணி தோல்வியைத் தழுவியுள்ளது. முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 183 ரன்கள் எடுத்தது. அதனை சேஸ் செய்த சென்னை அணியின் வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆனார்கள்.
விஜய் ஷங்கர் (69), தோனி (30) இருவரும் களத்தில் நின்று போராடியும் இலக்கை தொட முடியவில்லை. சென்னை அணி 20 ஓவர்களில் 158 ரன்கள் மட்டுமே எடுத்தது. இறுதியில் டெல்லி அணியிடம் 25 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி படுதோல்வி அடைந்தது.
குறிப்பாக, சென்னை அணியின் முன்னாள் கேப்டன் தோனி இந்த வருடம், விளையாடிய 4 இன்னிங்சில், 0 (2), 30( 16), 16 (11), 30 (26) எடுத்திருக்கிறார். ஆனால், அவரால் அணிக்கு வெற்றியைத் தேடித்தர முடியவில்லை என்றே ரசிகர்கள் வருந்துகிறார்கள். நேற்று அவர் கொஞ்சம் பொறுமையாக விளையாட, ‘இத்தோட போதும் தல… ரிடயர் ஆகிடுங்க’ என நெட்டிசன்கள் கடுமையான விமர்சித்து, ‘#DhoniRetirement‘ என்பது ட்ரெண்டாக்கி வருகின்றனர்.
தோனியின் மோசமான ரெக்கார்ட்
நேற்றைய ஆட்டத்தில் தோனி, எதிர்கொண்ட 19வது பந்தில்தான் முதல் பவுண்டரியை அடித்தார். நடப்பு ஐபிஎல் தொடரில், ஒரு பேட்டர் தனது முதல் பவுண்டரியை அடிக்க எடுத்துக்கொண்ட அதிகபட்ச பந்துகள் இதுவே. ஐபிஎல்-லில் முதல் பந்திலேயே சிக்சர் அடித்து கலக்கி வரும் நிலையில், தவிர்த்திருக்க வேண்டிய ஒரு சாதனை தோனி வசமாகி இருக்கிறது.
தோனி ஓய்வில்லை
தோனி தற்போதைக்கு ஓய்வில்லை என்று சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் தெரிவித்துள்ளார். தோனியின் பெற்றோர் சிஎஸ்கே இன்று விளையாடும் போட்டியை காண சென்னை மைதானத்திற்கு வந்தனர். இதை வைத்து அவர் இன்று ஓய்வு பெறக்கூடும் எனத் தகவல் வெளியானது. இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த பிளெமிங், ‘ஐபிஎல் தொடரில் இருந்து தோனி ஓய்வு பெறுவதாக வரும் செய்தி குறித்து எனக்கு எதுவும் தெரியாது, அவர் இன்னும் நன்றாகத்தான் ஆடிக்கொண்டு இருக்கிறார்’ என்றும் கூறியுள்ளார்.
பேட்டிங் ஆர்டர் மீது நம்பிக்கை உள்ளது
மேலும் சிஎஸ்கே அணி குறித்து பேசியபயிற்சியாளர் பிளெமிங் , “டெல்லிக்கு எதிரான போட்டியில் டாப் ஆர்டரில் சிறப்பாக ஆட வேண்டும் என்பதற்காகத்தான் கான்வேயை கொண்டு வந்தோம், ஆனால் அதுவும் சரியாக அமையவில்லை. த்ரிபாதி நல்ல ரிசல்ட்டை தரவில்லை என்பதால் நேற்றைய போட்டியில் அணி சேர்க்கையில் மாற்றங்களை செய்தோம், ஆனால் அதுவும் பலன் அளிக்கவில்லை. முதல் வரிசையில் வீரர்கள் சிறப்பாக ஆடினால்தான் பின்வரிசை வீரர்களை தேவையான இடத்தில் இறக்க முடியும். இந்த பேட்டிங் ஆர்டர் மீது எங்களுக்கு இன்னும் கொஞ்சம் நம்பிக்கை உள்ளது” என்றார்.