ஒலிம்பிக்கில் கிரிக்கெட்… 128 ஆண்டுகளுக்கு பிறகு கிடைக்கும் பெருமை.!
2024 ஜூலை மாதம் பாரீஸில் ஒலிம்பிக் போட்டி தொடர் நடைபெற உள்ளது. அதற்கு அடுத்ததாக 2026-ல் இத்தாலியில் ஒலிம்பிக் விளையாட்டுகள் நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து 2028ஆம் ஆண்டு அமெரிக்காவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளது. அமெரிக்கா, லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் தான் கிரிக்கெட்டை சேர்ப்பதற்கான பேச்சுவார்த்தைகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
ஏற்கனவே 1990ஆம் ஆண்டு முதன் முதலாக, ஒரே ஒரு முறை கிரிக்கெட் போட்டியானது ஒலிம்பிக்கில் சேர்க்கப்பட்டு இருந்தது. அந்த போட்டியில் பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து அணிகள் போட்டியிட்டு, இங்கிலாந்து அணி தங்கப் பதக்கத்தை வென்று இருந்தது. அதன் பிறகு 128 ஆண்டுகள் கழித்து கிரிக்கெட் போட்டியானது வரும் 2028 ஒலிம்பிக்கில் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கான பேச்சுவார்த்தைகள் தற்போது மும்முறமாக நடைபெற்று வரும் நிலையில், மும்பையில் ஒலிம்பிக் தொடர் குறித்த ஆலோசனை கூட்டத்தில் இது குறித்த முடிவு எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த வாரத்திற்குள் வாக்கு எண்ணிக்கை அடிப்படையில் அதாவது, ஒலிம்பிக் உறுப்பினர்களின் ஆதரவு அடிப்படையில் கிரிக்கெட் போட்டியை ஒலிம்பிக்கில் சேர்க்கலாமா வேண்டாமா என்ற இறுதி முடிவு எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த கிரிக்கெட் போட்டியுடன் பேஸ்பால், சாஃப்ட்பால், லாக்ரோஸ், ஸ்குவாஷ் ஆகிய போட்டிகளும் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒலிம்பிக் கமிட்டியின் இந்த முடிவுக்கு ஐசிசி தலைவர் கிரெக் பார்க்லே வரவேற்பு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறுகையில், ஒலிம்பிக்கில் கிரிக்கெட் போட்டியை கொண்டு வருவது குறித்து பரிந்துரைக்கப்பட்டதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். நூற்றாண்டுகளுக்கு பிறகு ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை பார்ப்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஒலிம்பிக்கில் கிரிக்கெட் அங்கீகரிக்கப்பட்டால் டி20 (20 ஓவர் போட்டி) முறையில் தான் போட்டிகள் நடைபெறும். ஐசிசி தரவரிசையின் படி முதல் ஆறு இடங்களை கைப்பற்றும் அணிகள் இந்த போட்டியில் பங்கேற்க வாய்ப்பு இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.