PAKvBAN : தொடரும் வரலாற்று வெற்றி! டெஸ்ட் தொடரை கைப்பற்றி வங்கதேசம் அபாரம்!
பாகிஸ்தான் அணியுடன் வங்கதேச அணி மேற்கொண்டு வந்த டெஸ்ட் தொடரை 2-0 என கைப்பற்றியுள்ளது வங்கதேச அணி.
சென்னை : வங்கதேச கிரிக்கெட் அணி பாகிஸ்தான் அணியுடன் சுற்று பயணம் மேற்கொண்டு வந்தது. இதில், 2 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரை வங்கதேச அணி பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடியது. வங்கதேச அணி இதுவரை டெஸ்ட் போட்டிகளில் பாகிஸ்தானை வீழ்த்தியதாக வரலாறு கிடையாது.
ஆனால், கடந்த ஆகஸ்ட்-21ம் தேதி தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி மிக சிறப்பாக விளையாடி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. இதனால், கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக பாகிஸ்தானை டெஸ்ட் போட்டியில் வீழ்த்தி புதிய சாதனையை படைத்தனர்.
அதனை தொடர்ந்து இந்த தொடரின் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியானது கடந்த ஆகஸ்ட்-30 ம் தேதி தொடங்கியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற வங்கதேச அணி பந்து வீச்சை தேர்வு செய்து விளையாடியது.அதன்படி முதல் இன்னிங்ஸிற்கு பேட்டிங் களமிறங்கியது பாகிஸ்தான் அணி.
சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் இழந்தாலும், பாகிஸ்தான் நட்சத்திர பேட்ஸ்மேன்கள் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்ததால் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 85.1 ஓவர்களில் 10 விக்கெட்டுகளையும் இழந்து 274 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் அணியில் முதல் இன்னிங்ஸில் அதிகபட்சமாக சைம் அயூப் 58 ரன்களும், மசூத் 57 ரன்களும் எடுத்திருந்தனர்.
வங்கதேச அணி சார்பாக மெஹிதி ஹசன் மிராஸ் 5 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார். அதன்பிறகு வங்கதேச அணி முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் அணியின் சிறப்பான பவுலிங்கை நன்றாக கையாண்டது வங்கதேச அணி. இருந்தாலும் பாகிஸ்தான் அணியின் ஸ்கோர் அருகில் வரை சென்று முன்னிலை வைக்காமல் இன்னிங்ஸை முடித்தனர்.
அதன்படி, வங்கதேச அணி 78.4 ஓவர்களில் 262 ரன்கள் எடுத்து 12 ரன்கள் பின்னிலையில் இருந்தனர். அதிலும், வங்கதேச வீரரான லிட்டன் தாஸ் 138 ரன்கள் எடுத்திருந்தார். அதனை தொடர்ந்து, பாகிஸ்தான் அணி 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்ய களமிறக்கியது. அதில், எந்த ஒரு பேட்ஸ்மேனும் நிதானமாக விளையாடவில்லை.
இதனால், பாகிஸ்தான் அணி 2-வது இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகளை இழந்து வெறும் 172 ரன்கள் எடுத்திருந்தது. அதில், வங்கதேச அணி சார்பாக ஹசன் மஹ்மூத் 5 விக்கெட்டுகளும், நஹித் ராணா 4 விக்கெட்டுகளும் கைப்பற்றி இருந்தனர். இதன் மூலம் வங்கதேச அணிக்கு 185 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப் பட்டது.
டெஸ்ட் போட்டிகளில் இது மிகவும் எளிதான இலக்கு என்பதால் வங்கதேச அணி பெரிய சிரமம் எடுத்துக் கொள்ளாமல் வெறும் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து பொறுமையாகவே விளையாடி இந்த இலக்கை எட்டியது. போட்டியின் 56-வது ஓவரில் 185 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது வங்கதேச அணி.
இந்த வெற்றியின் மூலம், வங்கதேச அணி பாகிஸ்தான் அணியை தொடர்ச்சியாக 2 முறை டெஸ்ட் போட்டிகளில் வீழ்த்தி உள்ளனர். மேலும், பாகிஸ்தான் அணிக்கு எதிராக 2-0 என டெஸ்ட் தொடரையும் கைப்பற்றி சாதனை படைத்துள்ளனர்.
டெஸ்ட் போட்டிகளில் வலிமையான பாகிஸ்தான் அணியை வங்கதேச அணி வீழ்த்திய கையோடு இந்த மாதம் இறுதியில் இந்தியாவுடன் டெஸ்ட் தொடரில் மோதவுள்ளனர். இந்த டெஸ்ட் தொடரில் வங்கதேச அணி இந்திய அணிக்கு சவாலாக இருப்பார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.