உலகக்கோப்பையில் தொடர் தோல்வி – இலங்கை கிரிக்கெட் வாரியத்தை கலைத்து அந்நாட்டு அரசு உத்தரவு!
ஐசிசி 13வது ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் தொடர் தோல்வியால் இலங்கை கிரிக்கெட் வாரியத்தை அந்நாட்டு அரசு கலைத்து உத்தரவிட்டது. நடப்பாண்டுக்கான ஒருநாள் உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. உலகக்கோப்பை தொடரில் மொத்தம் 45 லீக் போட்டிகளில் இதுவரை 37 போட்டிகள் முடிவடைந்துள்ளது.
இதனால், அரையிறுதிக்கு முன்னேற கடுமையான போட்டி நிலவி வருகிறது. இதில், முதல் இரண்டு இடங்களை பிடித்து இந்தியா, தென்னாபிரிக்கா அணிகள் அரையிறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது. மற்ற இரண்டு இடங்களுக்கு போட்டி நிலவுகிறது. இந்த உலகக்கோப்பை தொடர் இந்தியா, ஆஸ்திரேலியா, தென்னாபிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு சிறப்பாக அமைந்தாலும், நடப்பு சாம்பியனான, இங்கிலாந்து, இலங்கை, பாகிஸ்தான் அணிகளுக்கு பின்னடைவாக உள்ளது.
இதில், குறிப்பாக நடப்பாண்டு உலகக்கோப்பையில் இலங்கை அணி தொடர் தோல்விகளை சந்தித்து அந்நாட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இலங்கை அணி 7 ஆட்டங்களில் விளையாடி 5 தோல்வி மற்றும் 2 வெற்றி பெற்று அரையிறுதி வாய்ப்பை இழந்தது. மேலும், கடந்த ஆட்டத்தில் இந்தியாவுக்கு எதிராக 55 ரன்களில் சுருண்டு மோசமான தோல்வியை தழுவியது.
சாதனையை சமன் செய்த கிங்கோலிக்கு வித்தியாசமாக வாழ்த்து தெரிவித்த சச்சின்..!
இதனால் இலங்கை அணிக்கு எதிராக அந்நாட்டு ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், உலகக்கோப்பையில் தொடர் தோல்வி எதிரொலியாக இலங்கை கிரிக்கெட் வாரியத்தை கலைத்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. அதாவது, கிரிக்கெட் வாரியத்தை கலைத்து இலங்கை விளையாட்டு துறை அமைச்சர் ரோஷன் ரணசிங்கே உத்தரவிட்டுள்ளார்.
மேலும், இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் இடைக்கால வாரிய தலைவராக அர்ஜூனா ரணதுங்காவை நியமித்து அமைச்சர் ஆணையிட்டுள்ளார். 1996 உலகக்கோப்பை வென்றபோது கேப்டனாக இருந்த அர்ஜூனா ரணதுங்கா தலைமையில், இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் இடைக்கால குழுவில் ஓய்வு பெற்ற நீதிபதி உட்பட 7 பேர் இடம்பெற்றுள்ளனர்.
ஊழல், நிதி முறைகேடு, சூதாட்டம், வீரர் ஒழுங்கீனம் என குறிப்பிட்டு ஐசிசிக்கு இலங்கை அமைச்சர் கடிதம் எழுதியுள்ளார். இந்தியாவுக்கு எதிராக 302 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததை அடுத்து இலங்கை அமைச்சர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.