இந்தியாவுக்கு வாழ்த்துக்கள்! தொடரும் கோப்பை கனவு.. தோல்விக்கு பிறகு கேன் வில்லியம்சன் வருத்தம்!

Kane Williamson

நடப்பாண்டு ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பையில் முதலாவது அரையிறுதி போட்டி நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தினர். இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் ஷர்மா பேட்டிங் செய்ய முடிவு செய்தார்.

அரையிறுதி போட்டி:

அதன்படி, முதலில் களமிறங்கிய இந்திய அணி தொடக்கம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. குறிப்பாக ரோஹித் சர்மா அதிரடியான ஆட்டத்தை தொடங்கி வைக்க சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர் உள்ளிட்டோர் அணிக்கு ரன்களை குவித்தனர். இறுதியாக நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழந்து 397 ரன்களை குவித்தது இந்திய அணி.

இதில், விராட் கோலி 117, ஷ்ரேயாஸ் ஐயர் 105, சுப்மன் கில் 80 ரன்கள் அடித்து அசத்தினர். இதனைத்தொடர்ந்து 398 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து அணி, தொடக்கமே இரண்டு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இருப்பினும், அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன், டேரில் மிட்செல் ஆகியோர் ஜோடி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு ரன்களை சேர்த்தனர்.

இவர்களின் விக்கெட்டி எடுக்க இந்திய பந்துவீச்சாளர்கள் போராடினர். இருவரும் சிறப்பாக விளையாடி வந்ததால், ஒருபக்கம் பழைய நினைவுகளும் நினைவுக்கு வந்தது. இதுபோன்று பதற்றமான சூழலில் கேப்டன் கேன் வில்லியம்சன் 69 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். அப்போது தான் இந்தியர்களுக்கு பெரும் மூச்சு வந்தது. இருப்பினும், மறுபக்கம் டேரில் மிட்செல் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி தனது சதத்தை பூர்த்தி செய்தார்.

இந்தியா வெற்றி:

இவரது விக்கெட் இந்திய அணிக்கு முக்கியமாக இருந்தது. அடுத்தடுத்து விக்கெட் விழுந்தாலும், டேரில் மிட்செல் விக்கெட்டை எடுக்க இந்தியா தீவிரம் காட்டியது. அதற்கு பலனும் கிடைத்தது. டேரில் மிட்செல் 134 ரன்களுக்கு முகமது ஷமி ஓவரில் விக்கெட்டை இழந்தார். இறுதியாக நியூசிலாந்து அணி 48.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 327 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இந்தியா.

இறுதிப் போட்டிக்கு தகுதி:

முதல் அணியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது இந்தியா. இப்போட்டியில் சிறப்பாக பந்துவீசிய முகமது ஷமி மட்டுமே 7 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருதையும் தட்டி சென்றார். இந்த சூழலில் போட்டிக்கு பிறகு நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் கூறுகையில், இந்தியா மிக சிறப்பான அணி. சிறப்பாக விளையாடிய அவர்களுக்கு எங்களது வாழ்த்துக்கள்.

இந்தியாவுக்கு வாழ்த்துக்கள்:

இந்திய அணி தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடியுள்ளது. இன்று அவர்கள் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்தியா உயர்தர அணி. உலகத்தரம் வாய்ந்த பேட்டர்கள் தான் அழகாக பேட்டிங் செய்தனர். இந்தியாவுக்கு பெருமை, அவர்கள் எங்களை வீழ்த்தியுள்ளார்கள். எங்கள் அணி வீரர்கள் வெற்றிக்காக கடுமையாக போராடினார்கள். நாக் அவுட் சுற்றில் இருந்து வெளியேறுவது ஏமாற்றம் தருகிறது. ஆனால், அணியாக முன்னேறியதை நினைத்து நான் பெருமை அடைகிறேன்.

தொடரும் கோப்பை கனவு:

ஒரு அணியாக, நாங்கள் விளையாட விரும்பிய கிரிக்கெட்டில் உண்மையான அர்ப்பணிப்புடன் செயல்பட்டோம். இந்த உலகக்கோப்பை தொடரில் டேரில் மிட்செல், ரச்சன் ரவீந்திரா ஆகியோர் சிறப்பாக விளையாடினார்கள் என்றார். இந்த தோல்வி மூலம் நியூசிலாந்து அணிக்கு உலககோப்பை கனவு இன்னும் தொடர்கிறது. அதாவது, 50 ஓவர் உலகக்கோப்பை தொடரில் அரையிறுதியில் 7 முறையும், இறுதிப்போட்டியில் இரண்டு முறையில் தோல்வியை சந்தித்துள்ள நியூசிலாந்து அணியின் உலகக்கோப்பை கனவு இன்னும் தொடர்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்