முதல் பேட்டிங்கிலும் சொதப்பிய சென்னை…கொல்கத்தாவுக்கு வைத்த சின்ன இலக்கு!
கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 103 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.

சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த 3 போட்டிகளில் சேஸிங் செய்வதில் தான் சொதப்பியது என்று பார்த்தால் இன்று கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்தும் எந்த அளவுக்கு சொதப்பமுடியுமோ அந்த அளவுக்கு சொதப்பியுள்ளது. போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்து விளையாடியது. இதன்படி, முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய சென்னை அணி சிக்ஸர் மழை விளாசும் என்று பார்த்தால் கொல்கத்தா விக்கெட் மழையை பொழிய வைத்தது.
தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரச்சின் ரவீந்திரா 4, டெவோன் கான்வே 12 இருவரும் விக்கெட் இழந்து வெளியேற ராகுல் திரிபாதி, விஜய் சங்கர் இருவரும் பொறுப்பாக விளையாடுவார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். அதில் விஜய சங்கர் அதிரடி காட்டவேண்டும் என்று நினைத்து இரண்டு முறை கேட்சும் கொடுத்தார். ஆனால், அவருடைய ராசிக்கு இரண்டு முறையும் கொல்கத்தா தவறவிட்டது.
இதன் காரணமாக வாய்ப்பை பயன்படுத்திக்கொண்ட விஜய சங்கர் அவருடைய பங்கிற்கு 29ரன் கள் எடுத்து கொடுத்து பெவிலியனுக்கு திரும்பினார். அவருக்கு அடுத்ததாக இதோ நானும் வருகிறேன் என்பது போல ராகுல் திரிபாதி 16 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார். ஏற்கனவே 4 விக்கெட் இழந்த நிலையில் சிவம் துபே களத்திற்கு வந்தார். மற்றோரு முனையில் தோனி அல்லது ஜடேஜா இறங்குவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அஸ்வின் களமிறங்கினார்.
அஸ்வின் கொஞ்ச நேரம் நிதானமாக விளையாடி கொண்டிருந்த நிலையில், அவரும் சிக்ஸர் விளாச நினைத்து 1 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார். இதன் காரணமாக சென்னை அணி 12.5 ஓவர்கள் முடிவில் 70 ரன்கள் மட்டுமே எடுத்து 5 விக்கெட் இழந்திருந்தது. அதன்பிறகு ஜடேஜா 0 , தீபக்ஹூடாவும் 0, வந்த வேகத்தில் ஆட்டமிழந்து வெளியேறினார்கள்.
அணியின் கடைசி நம்பிக்கையாக தோனி,மற்றும் துபே இருந்த நிலையில், தோனியையும் சுழற்பந்துவீச்சாளர் சுனில் நரேனை வைத்து 1 ரன்களுக்கு கொல்கத்தா தூக்கியது. 9 விக்கெட் இழந்து 17-வது ஓவர்களில் இருந்து தடுமாறி விளையாடி வந்த சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 103 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்த ரன்களும் கடைசி நேரத்தில் ஒரு மனிதராக இருந்து விளையாடிய துபேவினால் (31)மட்டுமே அணிக்கு இந்த ரன்கள் கிடைத்தது.
சென்னை அணி 103 ரன்கள் எடுத்துள்ள நிலையில்,அடுத்ததாக 104ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா களமிறங்கவுள்ளது. கொல்கத்தா அணியின் பந்துவீச்சை பொறுத்தவரையில் அதிகபட்சமாக சுனில் நரைன் 3 விக்கெட்களையும் , வருண் சக்ரவர்த்தி, ஹர்ஷித் ராணா இருவரும் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினார்கள்.