ஐபிஎல் தொடரில் இருந்து சென்னை அணி வீரர் விலகல்!
நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் கைல் ஜேமிசன் முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக விலகல்.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டி:
2023- ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணை சமீபத்தில் வெளியானது. அதில், ஐபிஎல் 2023 தொடரின் 16-வது சீசன் போட்டிகள் வரும் மார்ச் 31 ஆம் தேதி தொடங்கி, இறுதிப் போட்டி மே 21-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதுவும், இந்த சீசனில் முதல் போட்டி தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், நடப்பு சாம்பியன் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதவுள்ளது. இந்த இரு அணிகளுக்கு இடையேயான போட்டி அகமதாபாத்தில் மார்ச் 31 ஆம் தேதி இரவு 7.30 மணி அளவில் நடைபெறவுள்ளது.
சென்னை அணி வீரர் விலகல்:
இந்த நிலையில், ஐபிஎல் 2023-ஆம் ஆண்டுக்கான தொடர் முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பெரிய அடி விழுந்துள்ளது. அதாவது, நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் கைல் ஜேமிசன், காயம் காரணமாக (cash-rich டி20) லீக்கில் இருந்து விலகியுள்ளார். கைல் ஜேமிசன் முதுகில் ஏற்பட்ட காயத்திற்காக அறுவை சிகிச்சைக்குப் பிறகு நான்கு மாதங்கள் வரை ஓய்வில் இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைல் ஜேமிசனுக்கு காயம்:
நியூசிலாந்தால், இங்கிலாந்துக்கு எதிரான தற்போதைய தொடருக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜேமிசன், அவரது முதுகில் ஏற்பட்ட முறிவு காரணமாக விளையாட முடியவில்லை. இந்த நிலையில், தொடரில் இருந்து விலகினார். இதனால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஆரம்பிக்கும் முன்பே பெரிய அடி விழுந்துள்ளது. கடந்த ஐபிஎல் ஏலத்தில் வேகப்பந்து வீச்சாளர் இல்லை என்பதால் கைல் ஜேமிசனை ரூ.1 கோடிக்கு வாங்கிருந்தது சென்னை நிர்வாகம்.
வேகப்பந்து வீச்சாளர்கள்:
இந்தியன் பிரீமியர் லீக்கின் வரவிருக்கும் சீசனில் எம்எஸ் தோனி தலைமையிலான அணியில் வேகப்பந்து வீச்சாளர் இல்லாமல் இருக்கும். ஏனென்றால், சிஎஸ்கேவின் மற்ற நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹரின் உடற்தகுதி குறித்து இன்னும் சில கேள்விகள் உள்ளன. தற்போது, கைல் ஜேமிசன் இல்லாதது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பெரும் பின்னடைவாக இருக்கும் என கூறப்படுகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் கைல் ஜேமிசனுக்கு பதிலாக வேறு எந்த வீரரை எடுக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.