சென்னை அவுங்க கோட்டை… பெரிய சவால் இருக்கு! பெங்களூருக்கு எச்சரிக்கை விட்ட வாட்சன்!
சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சுழற்பந்துவீச்சாளர்கள் சிறப்பாக விளையாடுவதால் பெங்களூர் கவனமாக இருக்கவேண்டும் என ஷேன் வாட்சன் தெரிவித்துள்ளார்.

சென்னை : (ஐபிஎல்) 2025 டி20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணியை வீழ்த்தி வெற்றி பெற்றிருக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணிக்கு, சென்னையில் ஒரு பெரிய சவால் காத்திருக்கிறது என்று ஆஸ்திரேலியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேன் வாட்சன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ரஜத் படிதார் தலைமையிலான ஆர்சிபி அணி, சென்னையில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நாளை வெள்ளிக்கிழமை, சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியை எதிர்கொள்ள உள்ளது. சென்னையின் பிட்ச் நிலைமைகளுக்கு ஏற்ப ஆர்சிபி தனது அணியின் லெவனை தேர்வு செய்து கவனமாக விளையாட வேண்டும் என வாட்சன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஜியோ ஸ்டார் நிகழ்ச்சியில் பேசிய வாட்சன், “சிஎஸ்கே அணியின் பந்துவீச்சு தரத்தைப் பார்க்கும்போது, சேபாக்கம் மைதானத்துக்கு செல்வது ஆர்சிபி அணிக்கு ஒரு பெரிய சவாலாக இருக்கும். சிஎஸ்கே-யின் பலத்தை மீறி வெற்றி பெற வேண்டுமென்றால், ஆர்சிபி அணியில் சில மாற்றங்கள் செய்ய வேண்டும். ஆனால், தவறுகள் நடக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள், ஏனெனில் சேபாக்கம் மைதானம் ஒரு சென்னை கோட்டை போல இருக்கிறது.
சென்னை அணியின் பலம், அவர்களது சிறந்த சுழற்பந்து வீச்சாளர்கள்தான். சென்னையில் சிறப்பாக விளையாடுவதற்கு ஏற்றவாறு சிஎஸ்கே அணி உருவாக்கப்பட்டுள்ளது. மும்பைக்கு எதிரான முதல் போட்டியில் அருமையாக விளையாடிய சுழற்பந்து வீச்சாளர்களான ஆர். அஷ்வின், ரவீந்திர ஜடேஜா மற்றும் நூர் அகமது ஆகியோரைப் பாருங்கள். இந்த பிட்சுக்கு ஏற்ற வீரர்கள் அவர்கள். எனவே, அவர்களை எதிர்கொள்ளும்போது பெங்களூர் வீரர்கள் கூடுதல் கவனம் எடுத்துக்கொள்ளவேண்டும். சிஎஸ்கே அணிக்காக முதல் போட்டியிலேயே சிறப்பாக விளையாடியது.
மும்பை அணியை குறைவான ரன்களிலே முடக்கியது என்பது போட்டியை பார்த்தவர்களுக்கு தெரிந்திருக்கும். அதற்கு காரணம் அவர்களுடைய சுழற்பந்துச்சாளர்கள் தான். நூர் செம பார்மில் இருக்கிறார். கடந்த போட்டியை போலவே நிச்சயமாக சிறப்பாக செயல்படுவார் எனவே, பெங்களூர் சிறப்பாக பயிற்சி எடுத்து மைதானத்திற்கு ஏற்றது போல ஆடவேண்டும்” எனவும் வாட்சன் பேசியுள்ளார்.