கடைசி நேரத்தில் கைவிட்ட சென்னை? கைகொடுத்து அஸ்வினி குமாரை தூக்கிவிட்ட மும்பை!
மும்பை அணிக்காக விளையாடும் அஸ்வினி குமாரை 2024-ஆம் ஆண்டு சென்னை பயிற்சிக்கு எடுத்தாலும் சில காரணங்களால் 2025 ஏலத்தில் எடுக்கவில்லை.

மும்பை : யார்ரா இந்த பையன் என நேற்றிலிருந்து இணையவாசிகள் சமூக வலைத்தளங்களில் தேடிக்கொண்டு இருக்கும் ஒரு பெயர் என்றால் மும்பை வீரர் அஸ்வினி குமார் பெயரை தான். ஏனென்றால், நேற்று தான் அவர் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் விளையாடி ஐபிஎல் போட்டிகளில் அறிமுகமானார். ஆனால், முதல்போட்டியிலேயே அனைவரையும் திரும்பி பார்க்க வைக்கும் வகையில், 4 விக்கெட் வீழ்த்தி அறிமுகமான போட்டியில் அதிக விக்கெட் வீழ்த்திய இந்திய பந்துவீச்சளார் என்ற சாதனையை படைத்தார்.
பஞ்சாபைச் சேர்ந்த 23 வயது இடது கை வேகப்பந்து வீச்சாளாரான அஸ்வினி குமார் தன்னுடைய வாழ்க்கையில் பல கஷ்டங்களை தாண்டி இப்போது கிரிக்கெட் உலகில் தடம் பதித்து மும்பை அணியில் தனக்கான இடத்தை பிடித்திருக்கிறார். ஆனால், மும்பை அணியில் அவர் விளையாடுவதற்கு முன்பே சென்னை அணி அவருடைய திறமையை பார்த்து தங்களுடைய அணியில் எடுக்க முயற்சி செய்துள்ள கதை பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. அதனை பற்றி பார்ப்போம்…
அஸ்வினி குமார் 2024 ஐபிஎல் சீசனுக்கு முன்பு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சி முகாமுக்கு அழைக்கப்பட்டு இருக்கிறார். அப்போது பயிற்சியாளர்கள் அவரை நெட் பவுலராக (net bowler) பரிசோதித்தது பார்த்தபோது அவருடைய இடது கை வேகப்பந்து வீச்சு திறன் பார்த்து ஆச்சரியப்பட்டிருக்கிறார்கள். ஏற்கனவே தீபக் சாஹர், ஷர்துல் தாக்கூர் போன்ற வலது கை வேகப்பந்து வீச்சாளர்கள் இருந்தாலும், ஒரு இடது கை பவுலர் அணிக்கு வித்தியாசமான பலத்தை கொடுக்கும் என்பதால் முடிவெடுத்து அவரை தேர்வு செய்து வைத்திருந்தனர்.
பயிற்சியெல்லாம் கொடுத்து கடைசி நேரத்தில் சென்னை அணி அவரை ஏலத்தில் எடுக்கவில்லை. ஆனால், சென்னை அவரை ஏலத்தில் எடுக்காமல் கைவிட்டதற்கு சில முக்கிய காரணங்கள் இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
2025 மெகா ஏலத்தில் CSK தங்களது பர்ஸை (ரூ. 120 கோடி) முக்கிய வீரர்களை தக்கவைப்பதற்கும், பேட்ஸ்மேன்கள் மற்றும் ஆல்-ரவுண்டர்களை எடுப்பதற்கும் செலவிட்டது. ரவீந்திர ஜடேஜா (ரூ. 18 கோடி), ருதுராஜ் கெய்க்வாட் (ரூ. 15 கோடி), மற்றும் டேரில் மிட்செல் (ரூ. 8 கோடி) போன்றவர்களை எடுத்த பிறகு, அவர்களுக்கு பந்துவீச்சு துறையில் மேலும் முதலீடு செய்ய தேவையில்லை என்று முடிவு செய்திருக்கலாம். அஸ்வினியை ரூ. 30 லட்சத்தில் எடுப்பது சாத்தியமாக இருந்தாலும் முயற்சி செய்யவில்லை.
அஸ்வினியின் உள்ளூர் புள்ளிவிவரங்கள் (4 டி20 போட்டிகளில் 3 விக்கெட்டுகள், 8.50 எகானமி) மிகவும் சிறப்பாக இல்லை. CSK பொதுவாக அனுபவமிக்க வீரர்களையோ அல்லது உள்ளூர் கிரிக்கெட்டில் சீரான செயல்பாடு காட்டியவர்களையோ தேர்ந்தெடுக்கும் பழக்கம் கொண்டது. இதன் காரணமாக பிறகு பார்த்துக்கொள்ளலாம் என அவரை ஏலத்தில் எடுக்காமல் விட்டது. அந்த நேரத்தில் தான் மும்பை அணி அவரை 30 லட்சம் கொடுத்து எங்க அணிக்கு வாங்க என்பது போல கை கொடுத்து தூக்கியது. அவரும் தனக்கு கிடைத்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தி அறிமுக போட்டியிலேயே 4 விக்கெட் வீழ்த்தி அசத்தியுள்ளார். வரும் போட்டிகளிலும் சிறப்பாக விளையாடுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.