ஐபிஎல் 2025 : தோனி இடத்துக்கு இவர் தான்! இந்த வீரருக்கு போட்டி போடும் சென்னை, பெங்களூரு?
இந்த ஆண்டின் இறுதில் நடைபெறவுள்ள மெகா ஏலத்தில் பெங்களூரு அணியுடன் கடுமையான போட்டிக்கு சென்னை அணி தயாராகி வருவதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை : நடைபெறப்போகும் ஐபிஎல் மெகா ஏலத்தில் சென்னை அணி, லக்னோ அணியின் கேப்டனான கே.எல்.ராகுலை குறி வைப்பதாக ஒரு தகவல் பரவி வருகிறது. கடந்த ஐபிஎல் தொடரில் ராகுலுக்கும், லக்னோ அணியின் உரிமையாளருக்கும் இடையே சில கருத்து வேறுபாடுகள் இருந்து வந்தது.
இதனால் ரசிகர்களால், 2025 ஆண்டில் நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரில் அவர் லக்னோ அணியை விட்டு வெளியேறி வேறு அணிக்கு செல்லவுள்ளதாக கூறப்பட்டது. அதே வேளை ஐபிஎல் தொடரின் நட்சத்திர அணியான பெங்களூரு அணியும் டூ பிளெஸ்ஸி போன்ற வீரர்களை விடுவித்து விட்டு கே.எல்.ராகுலை எடுக்க உள்ளதாக ரசிகர்கள் கூறிவந்தனர்.
ஆனால், இது குறித்து எந்த அதிகாரப்பூர்வ தகவலையும் எந்த அணியும் அறிவிக்கவில்லை. ஆனால் சமீபத்தில் கே.எல்.ராகுல் ரசிகர் ஒருவரைச் சந்தித்து பேசினார். அப்போது அந்த ரசிகர், ‘நீங்கள் பெங்களூரு அணிக்கு விளையாட உள்ளேர்களா?’ என்று கேட்டிருப்பார்.
Read More : ஐபிஎல் 2025: அடுத்த ஆண்டு ஆர்சிபி கேப்டனா? கே.எல்.ராகுல் சொன்ன பதில்?
அதற்கு ராகுலும், ‘பார்க்கலாம்’ என நாசுக்காக பதிலளித்திருப்பார். இதற்கு ரசிகர்கள் அவருக்கு பெங்களூரு அணிக்கு வருவதற்கு விருப்பம் தான் எனவும், பெங்களூரு அணி அவரை ஏலத்தில் எடுக்க வேண்டும் எனவும் கூறி வருகின்றனர். மேலும், துலீப் டிராபி தொடரில் ராகுல் விளையாடிய போதும் மைதானத்தில் இருந்த ரசிகர்கள் அவரை, ‘பெங்களூரு கேப்டன் கே.எல்.ராகுல்’ என கோஷமிட்டனர்.
அவரும் பெங்களூரை பிறப்பிடமாக கொண்டவர். இதனால், பெங்களூரு அணி ரசிகர்களும் கே.எல்.ராகுலை வரவேற்க தொடங்கியுள்ளனர். இப்படி இருக்க மறுமுனையில் சென்னை அணியின் முன்னாள் கேப்டனான எம்.எஸ்.தோனிக்கு பதிலாக விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் ஒருவரை எடுக்க வேண்டிய தேடுதல் வேட்டையில் சென்னை அணி தற்போது இருந்து வருகிறது.
அதனால், டெல்லி அணியின் கேப்டனான ரிஷப் பண்டை முதலில் குறி வைத்ததாக கூறப்பட்டது. அதற்கு டெல்லி அணி பண்டை விடுவிக்க தயாராக இல்லை என ஒரு தகவலும் டெல்லி அணி சுற்று வட்டாரத்தின் மூலம் தெரியவந்தது. இதனால், சென்னை அணி அடுத்ததாக கே.எல்.ராகுலை ஏலத்தில் குறிக்க வைக்க போவதாக தற்போது ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.
மேலும், கே.எல்.ராகுல் ஒரு தரமான விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் மற்றும் ஒரு அணியை வழி நடத்துவதற்கான கேப்டன்ஷிப் தகுதியும் அவரிடம் உள்ளது. இதனால், நடைபெற உள்ள ஐபிஎல் மெகா ஏலத்தில் லக்னோ அணி ராகுலை விடுவித்தால் சென்னை அணிக்கும், பெங்களூரு அணிக்கும் இடையே போட்டிகள் கடுமையாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.