இறுதிப்போட்டியின் நேரம் மாற்றம்.. ஐபிஎல் நிறைவு விழாவில் ஆஸ்கர் நாயகனின் நிகழ்ச்சி!
ஐபிஎல் தொடரின் நிறைவு விழாவில் ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர். ரகுமான் பங்கேற்கும் பிரமாண்ட இசை நிகழ்ச்சி.
நடப்பாண்டு 15-ஆவது சீசன் ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று, தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் மகராஷ்டிரா மாநிலத்தில் மும்பை, புனே நகரங்களில் உள்ள 4 மைதானங்களில் ரசிகர்கள் அனுமதியுடன் நடைபெற்று வருகிறது. இந்த வருடம் புதிதாக லக்னோ மற்றும் குஜராத் ஆகிய 2 அணிகள் சேர்க்கப்பட்டதால், 2 குழுக்களாக பிரிக்கப்பட்டு 70 சூப்பர் லீக் போட்டிகளை நடத்த திட்டமிடப்பட்டது.
அதன்படி, இதுவரை 67 லீக் போட்டிகள் முடிந்துள்ள நிலையில், இன்னும் 3 சூப்பர் லீக் போட்டிகளே எஞ்சியுள்ளன. இதனைத் தொடர்ந்து பிளே ஆஃப் சுற்றுப் போட்டிகள் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்திலும், இறுதிப் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற இருக்கின்றன. வரும் 29-ம் தேதி நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற இருக்கும் இறுதிப்போட்டி துவங்கும் நேரத்தை பிசிசிஐ மாற்றியுள்ளது.
இந்த நிலையில், ஐபிஎல் தொடரின் நிறைவு விழாவில் ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர். ரகுமான் பங்கேற்கும் பிரமாண்ட இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. வரும் 29-ம் தேதி நடைபெறும் ஐபிஎல் இறுதிப்போட்டியின்போது நிறைவு விழாவுக்கு பிசிசிஐ ஏற்பாடு செய்துள்ளது. ஐபிஎல் நிறைவு விழாவில் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்க உள்ளதாகவும், நாட்டின் 75-வது சுதந்திரத் தினத்தை கொண்டாடும் வகையிலும், இந்திய கிரிக்கெட் பயணத்தை குறிக்கும் வகையிலும் இந்த நிகழ்ச்சிகளை நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.
நிறைவு விழா நடைபெற உள்ளதால் இறுதிப்போட்டி இரவு 7.30 மணிக்கு பதில் 8 மணிக்கு தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இறுதிப்போட்டி நடைபெறும் நரேந்திர மோடி மைதானத்தில் நிறைவு விழாவை ரசிகர்கள் பார்க்கலாம் என்று பிசிசிஐ கூறியுள்ளது. கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக, பார்வையாளர்கள் குறைந்த அளவிலேயே அனுமதிக்கப்படுவர் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
சுமார் 45 நிமிடங்கள் நடக்கும் இந்த கலை நிகழ்ச்சிகள் முடிந்தப்பின், இறுதிப்போட்டி தொடங்கும். நடப்பு சீசனில் சென்னை, மும்பை, கொல்கத்தா, பஞ்சாப், ஹைதராபாத் அணிகளும் பிளே ஆஃப் ரேஸிலிருந்து வெளியேறிய நிலையில், இந்தாண்டு புதிய அணிகளாக அறிமுகமான குஜராத் மற்றும் லக்னோ அணிகள் முதல் இரண்டு இடங்களைப் பிடித்து பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிப் பெற்றுவிட்ட நிலையில், மீதமுள்ள 2 இடங்களில் எந்த அணி என்று வரும் போட்டிகள் மூலம் தெரிந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.