சாம்பியன்ஸ் ட்ராபி : கோப்பையை வென்ற அணிகளும், வெல்லாத அணிகளும்!
சுமார் ஏழு வருடங்களுக்கு பிறகு அடுத்த ஆண்டில் பாகிஸ்தானில் வைத்து ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி தொடரானது நடைபெற உள்ளது.
சென்னை : ஐசிசி நடத்தும் மிகப்பெரிய கோப்பைக்கான தொடர் என்றாலே ரசிகர்களிடையே வரவேற்பும், எதிர்பார்ப்பும் அதிகமாகவே இருக்கும். அதிலும், 7 வருடங்களுக்கு பிறகு மினி உலகக்கோப்பை எனப்படும் 9-வது சாம்பியன்ஸ் டிராபி தொடரானது அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற இருக்கிறது.
கடந்த 2017-ம் ஆண்டு நடைபெற்ற கடைசி சாம்பியன்ஸ் ட்ராபி தொடரில் இந்திய அணியை வீழ்த்தி பாகிஸ்தான் அணி கோப்பையை வென்றிருப்பார்கள். இந்த சாம்பியன்ஸ் ட்ராபி கோப்பையை இந்தியா, ஆஸ்திரேலியா போன்ற பல அணிகள் வெற்றி பெற்றிருக்கிறது.
ஐசிசி தரவரிசையில் இருக்கும் முதல் 8 இடத்தில் இருக்கும் அணிகளுக்கு இடையே நடக்கும் இந்த சாம்பியன்ஸ் ட்ராபி தொடரானது கடந்த 1998-ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. 50 ஓவர் உலகக்கோப்பை, 20 ஓவர் உலகக்கோப்பை என இரு பெரிய கோப்பைகளை வெல்ல முடியாத பெரிய அணி என்றால் அது தென்னாபிரிக்கா அணி தான்.
அதே தென்னாபிரிக்கா அணி தான் இந்த சாம்பியன்ஸ் ட்ராபியை வென்ற முதல் அணியாகவும் இருக்கிறது. அதே போல அதிக முறை இந்த சாம்பியன்ஸ் ட்ராபியை வென்றது ஆஸ்திரேலிய அணியும், இந்திய அணியும் தான். ஆஸ்திரேலிய 2006 மற்றும் 2009 என இருமுறை கோப்பையை வென்றுள்ளது.
அதே போல இந்திய அணியும் 2002, 2013 என இரு முறை கோப்பையை வென்றுள்ளது. அதிலும் 2002 ம் ஆண்டு மழையின் காரணமாக போட்டி நடைபெறாததால் இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு கோப்பையை பகிர்ந்து அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கோப்பையை வெல்லாத அணி :
இங்கிலாந்து அணி மட்டும் தான் இதுவரை இந்த சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை வெல்லாத ஒரே அணியாக இருக்கிறது. இங்கிலாந்து அணி 2004-ம் ஆண்டு மற்றும் 2013-ம் ஆண்டுகளில் இறுதி போட்டி வரை தகுதி பெற்றது.
ஆனால், 2004 ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணியிடமும், 2013-ம் ஆண்டு இந்தியாவிடமும் தோல்வியை தழுவி கோப்பையை வெல்லும் வாய்ப்பை தவறவிட்டது. இங்கிலாந்து அணிக்கு அடுத்த படியாக கோப்பையை வெல்லாத அணியாக வங்கதேச அணி இருந்து வருகிறது.
அதே போல கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக ஆப்கானிஸ்தான் அணி நடைபெற போகும் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன்னேறி இருக்கிறது. கடந்த டி20 உலகக்கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி தற்போது சாம்பியன்ஸ் ட்ராபி தொடரில் முன்னேறி இருப்பதால் கிரிக்கெட் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.
இதுவரை கோப்பையை வென்ற அணிகள் :
- 1998 – தென்னாபிரிக்கா ; எதிரணி – வெஸ்ட் இண்டீஸ்
- 2000- நியூஸிலாந்து ; எதிரணி – இந்தியா
- 2002 – ஸ்ரீலங்கா மற்றும் இந்தியா
- 2004 – வெஸ்ட் இண்டீஸ் ; எதிரணி – இங்கிலாந்து
- 2006 – ஆஸ்திரேலியா ; எதிரணி – ஆஸ்திரேலியா
- 2009 – ஆஸ்திரேலியா ; எதிரணி – நியூஸிலாந்து
- 2013 – இந்தியா ; எதிரணி – இங்கிலாந்து
- 2017 – பாகிஸ்தான் ; எதிரணி – இந்தியா