முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் மீது வழக்குப்பதிவு..!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஸ்ரீசாந்த் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். ஸ்ரீசாந்த் மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு அவர் மீது கேரளா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஸ்ரீசாந்த் தவிர, அவரது நெருங்கிய நண்பர்கள் இருவரின் பெயரும் புகாரில் உள்ளது. வடகேரளாவை சேர்ந்த ஒருவர் கொடுத்த மோசடி புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
குற்றம் சாட்டப்பட்ட ராஜீவ் குமார் மற்றும் வெங்கடேஷ் கினி மற்றும் ஸ்ரீசாந்த் ஆகியோர் ஏப்ரல் 25, 2019 முதல் வெவ்வேறு தேதிகளில் தன்னிடம் இருந்து சுமார் ரூ.19 லட்சம் பெற்றதாக புகார்தாரர் சரிஷ் கோபாலன் குற்றம் சாட்டியுள்ளார். கர்நாடகாவில் உள்ள கொல்லூரில் ஸ்போர்ட்ஸ் அகாடமி கட்டுவதாக கூறி தன்னிடமிருந்து 19 லட்சம் பணம் பெற்று மோசடி செய்ததாக அவர் புகார் அளித்தார்.
இது தொடர்பாக ஸ்ரீசாந்த் உட்பட மூன்று பேர் மீது ஐபிசி பிரிவு 420ன் கீழ் கேரளா போலீசார் மோசடி வழக்கு பதிவு செய்துள்ளனர். 2007 டி-20 உலகக்கோப்பை மற்றும் 2011 ஒருநாள் உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியில் ஸ்ரீசாந்த் இடம்பெற்று இருந்தார். ஸ்ரீசாந்த் இந்தியாவுக்காக 27 டெஸ்ட், 53 ஒருநாள் மற்றும் 10 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். ஸ்ரீசாந்த் 44 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 40 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.