கரீபியன் லீக் 2024 : கடைசி ஓவர் திக் திக் ..! த்ரில் வெற்றியை ருசித்த டிரின்பாகோ!
மேற்கு இந்திய நாடுகளில் நடைபெற்று வரும் கரீபியன் லீக் தொடரின் 15-வது போட்டியில் டிரின்பாகோ அணி வெற்றி பெற்றுள்ளது.
பார்படாஸ் : ஐபிஎல் தொடரைப் போலவே மேற்கு இந்திய தீவுகளில் நடக்கும் தொடர் தான் கரீபியன் லீக். இந்த தொடருக்கு மேற்கு இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பு உள்ளது. இந்த தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது, இந்த தொடரின் 15-வது போட்டி இன்று நடைபெற்றது.
இந்த போட்டியில் பார்படாஸ் ராயல்ஸ் அணியும், டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியும் மோதியது. இதில் முதலில் டாஸ் வென்ற டிரின்பாகோ அணி பந்து வீச்சை தேர்வு செய்து விளையாடியது. இதனால், பார்படாஸ் அணி பேட்டிங் செய்யக் களமிறங்கியது. முதல் ஓவரிலே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பார்படாஸ் ராயல்ஸ் அணி தடுமாறியது.
அதன்பிறகு, சொற்ப ரன்களில் களமிறங்கிய முக்கிய பேட்ஸ்மேன்கள் வெளியேற அந்த அணி 71 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அந்த நிலையில், அணியின் கேப்டனான ரோவ்மேன் பவலின் 38 பந்துக்கு 59 ரன்கள் என்ற அதிரடியான ஆட்டத்தால் அணியைச் சரிவிலிருந்து மீட்டார்.
இதன் காரணமாக 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 156 ரன்களை மட்டுமே எடுத்தது. டிரின்பாகோ அணியில் அதிகபட்சமாக வக்கார் சலாம்கெயில் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். அதனைத் தொடர்ந்து டிரின்பாகோ அணி எளிய இலக்கண 157-ஐ எடுப்பதற்கு பேட்டிங் களமிறங்கியது. எளிதில் வெற்றி பெறலாம் என நினைத்துக் களமிறங்கிய அந்த அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
அதன்படி, தொடக்க வீரர்கள் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழக்க ரன்களை எடுக்க டிரின்பாகோ அணி தடுமாறியது. இவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய பேட்ஸ்மேன்களான ஷக்கரே பாரிஸ் 35 ரன்கள், நிக்கோலஸ் பூரன் 35 ரன்கள் மற்றும் கீசி கார்டி 32 ரன்கள் எடுத்து நிலைத்து விளையாடாமல் போனார்கள்.
இதனால், போட்டி எந்த அணி பக்கமும் சாயாமல் நடுநிலையாகவே இருந்தது. தொடர்ந்து களமிறங்கிய அணியின் கேப்டன் பொல்லார்டும் 7 ரன்களுக்கு அவுட்டாகி வெளியேறப் போட்டி இன்னும் சூடு பிடித்தது.
ஆனால், அதன் பிறகு களமிறங்கி விளையாடிய அகேல் ஹோசின்க் மற்றும் டெரன்ஸ் ஹிண்ட்ஸ் இருவரின் நிதானமான கூட்டணியால் 19.5 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்களை எடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் “த்ரில்” வெற்றியைப் பெற்றது டிரின்பாகோ அணி. இந்த வெற்றியின் மூலம் புள்ளி பட்டியலிலும் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி 3-வது இடம் பிடித்து அசத்தி இருக்கிறது.