வீரர்கள் குறைகளை உணர்ந்து விளையாடனும்! தோல்விக்கு பின் ஹர்திக் பாண்டியா பேச்சு!
Hardik Pandya : மும்பை வீரர்கள் குறைகளை உணர்ந்து விளையாடவேண்டும் என்று அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறியுள்ளார்.
நேற்று ஏப்ரல் 23-ஆம் தேதி ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங்கை தேர்வு செய்து பேட்டிங் செய்தது. 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் மட்டுமே மும்பை இந்தியன்ஸ் அணி அடித்து இருந்தது.
அடுத்ததாக 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி களமிறங்கியது. 18.4 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்தது. இந்த போட்டி முடிந்த பிறகு மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா தோல்வி குறித்து பேசியுள்ளார்.
இது குறித்து பேசிய ஹர்திக் பாண்டியா ” நாங்கள் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடிய போது விக்கெட்களை விட்டது பெரிய தவறாக நினைக்கிறேன். திலக் வர்மா மற்றும் நேஹால் வதேரா இருவரும் நிதானமாக விளையாடியது அணிக்கு உதவியது. அவர்கள் இருவரும் இணைந்து விளையாடிய காரணத்தால் தான் இந்த அளவுக்காவது ரன்கள் வந்தது.
நடுவில் நன்றாக சென்றாலும் கடைசியாக சில ஓவர்களில் எங்களால் சரியான ஃபினிஷிங் விளையாட்டை கொடுக்க முடியவில்லை. இன்னும் ஒரு 15, 20 ரன்கள் அதிகமாக அடிக்கவேண்டும் என்று நினைத்தோம் ஆனால், முடியாமல் போய்விட்டது. பந்துவீச்சிலும், பீல்டிங்கில்-லும் எங்களுக்கு இந்த நாள் சிறப்பான ஒரு நாளாக அமையவில்லை.
எங்களுடைய அணியில் இருக்கும் வீரர்கள் எல்லாம் பொறுப்புகளை உணர்ந்து விளையாடவேண்டும் என்று நான் சொல்வேன். கடந்த போட்டிகளில் செய்த தவறுகள் மற்றும் குறைகளை உணர்ந்து அடுத்ததாக வரும் போட்டிகளில் அது எல்லாம் வராமல் பார்த்து கொண்டால் நன்றாக இருக்கும். அடிக்கடி சரியாக விளையாட வில்லை என்று வீரர்களை அடிக்கடி அமர வைப்பது சுத்தமாக பிடிக்காது. நான் எப்போதுமே நல்ல வீரர்களுக்கு வாய்ப்பு கொடுப்பேன். அடுத்தடுத்த போட்டிகளில் சிறப்பாக செயல்படுவோம்” எனவும் ஹர்திக் பாண்டியா கூறியுள்ளார்.