“மற்ற அணியுடன் எங்களை ஒப்பிட விரும்பவில்லை”- தோல்விக்குப் பிறகு தோனி ஓபன் டாக்.!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, சொந்த மண்ணில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக படுதோல்வியை சந்தித்தது.

சென்னை : ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் தொடர்ந்து 5வது முறையாக தோல்வியை தழுவியது சென்னை சூப்பர் கிங்ஸ். 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றது. முதல் பேட்டிங் செய்த சென்னை அணி, மொத்தமாகவே வெறும் ஒரு சிக்ஸர் மட்டுமே அடித்திருந்தது. தொடர் விக்கெட்கள் காரணமாக 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 9 விக்கெட் இழப்பிற்கு 103 ரன்கள் மட்டுமே எடுத்தது.
அடுத்ததாக 204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி, 10.1 ஓவர்கள் முடிவிலே 2 விக்கெட் இழப்பிற்கு 107 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்நிலையில், போட்டி முடிந்த பின் பேசிய சிஎஸ்கே அணியின் இடைக்கால கேப்டன் தோனி, போட்டியில் நடந்த அனைத்து தவறுகளையும் நினைவு கூர்ந்தார். தொடர்ந்து ஐந்தாவது தோல்விக்குப் பிறகு, ஆடுகளம் தன்மை சவாலாக இருந்ததால் தான் பவர்பிளேவில் ரன் அடிக்க முடியவில்லை என்று தோனி சுட்டிக்காட்டினார்.
தோல்வி குறித்து பேசிய தோனி, “எங்களுடைய பலம் என்னவோ அதற்கேற்ப ஆடினாலே போதும் என நினைக்கிறேன். எங்கள் அணியில் சிறப்பான ஓப்பனர்கள் இருக்கிறார்கள். அவர்கள் எல்லா பந்துளையும் சிக்ஸர் அடிக்கக்கூடியவர்கள் அல்ல. அவர்கள் திறன் வாய்ந்த தரமான பேட்டர்கள்
6 ஓவர்களுக்கு 60 ரன்கள் எடுக்க வேண்டுமென்று அழுத்தத்துடன் ஆடினால் அது ஆபத்தாகி விடும். பார்ட்னர்ஷிப் அமைத்து ஆடினால், ஆட்டத்தின் பின்கட்டங்களில் அதை ஈடுகட்டிவிட முடியும். மாறாக விக்கெட்களை இழந்தால் மிடில் ஆர்டர் பேட்டர்களுக்கு அழுத்தம் அதிகமாகும். கடைசி வரை அடித்து ஆடமுடியாத நிலை ஏற்பட்டுவிடும்.
கடந்த சில போட்டிகள் எதுவுமே எங்களுக்கு சாதகமாக அமையவில்லை. இந்தப் போட்டியில் நாங்கள் போதுமான ரன்கள் சேர்க்கவில்லை. ஒரு நல்ல பார்ட்னர்ஷிப் அமையவில்லை. எங்களிடம் நல்ல தொடக்க வீரர்கள் உள்ளனர். ஸ்கோரை பார்த்து விரக்தி அடையாமல் இருப்பது மிகவும் முக்கியம். மற்ற அணியுடன் எங்களை ஒப்பிட விரும்பவில்லை” என்று கூறியுள்ளார்.