வங்கதேச மகளிர் அணிக்கு ‘பை பை’! 7 விக்கெட் வித்தியாசத்தில் தென்னாபிரிக்கா அணி வெற்றி !
இன்று நடைபெற்ற டி20 மகளிர் போட்டியில் தென்னாபிரிக்கா அணி, வங்கதேச அணிக்கு எதிராக நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திப் போட்டியில் வெற்றி பெற்றது.
துபாய் : நடைபெற்று வரும் டி20 மகளிர் போட்டியில் இன்றைய 16-வது போட்டியில் வங்கதேச மகளிர் அணியும், தென்னாப்பிரிக்க மகளிர் அணியும் மோதியது. இதில் முதலில் டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது.
அதன்படி பேட்டிங் கிளம்புறீங்க தொடக்க வீராங்கனை டிலாரா அக்தர் ரன்ஸ் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அவருக்குப் பின் மிகவும் நிதானமாக விளையாடிக் கொண்டிருந்த மற்றொரு தொடக்க வீராங்கனையான ஷதி ராணி 19 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார்.
இருவரையும் தொடர்ந்து அடுத்ததாக 3-வது விக்கெட்டுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்த சோபனா மோஸ்தரியும், அணியின் கேப்டனான நிகர் சுல்தானாவும் மிகவும் நிதானமாக தட்டி தட்டி ரன்களைச் சேர்த்தனர். ஆனாலும், வங்கதேச மகளிர் அணியின் ஸ்கோர் 100 ரன்களை எட்டுவதற்கு திணறியது.
இறுதியில், 20 ஓவர்கள் பேட்டிங் செய்த வங்கதேச அணி 3 விக்கெட்டுகளை இழந்து 106 ரன்கள் எடுத்தது. தென் ஆப்பிரிக்க அணியின் மரிசான் கேப், அன்னேரி டெர்க்சன், நோன்குலுலேகோ மலாபா ஆகியோர் தலா 1 விக்கெட் கைப்பற்றி இருந்தனர்.
அதனைத் தொடர்ந்து 107 ரன்கள் அடித்தால் வெற்றியென பேட்டிங் களமிறங்கியது தென் ஆப்பிரிக்க மகளிர் அணி. அதன்படி, தொடக்கத்தில் முதல் விக்கெட்டை விரைவாக பறிகொடுத்த தென்னாபிரிக்க அணி அதன் பிறகு சுதாரிப்பாக விளையாடியது.
களத்தில் இருந்த இரு வீராங்கனைகளும் நிதானமான ஆட்டத்தை மட்டுமே வெளிப்படுத்தினார். தேவையான நேரத்தில் பௌண்டரிகளும், ஒரு ஓவருக்கு 6 ரன்களும் என போட்டு வைத்த பிளான் படி விளையாடினார்கள். இதன் காரணமாக 3 விக்கெட்டுகளை மட்டுமே தென்னாப்பிரிக்க அணி இழந்தது.
இதனால்,17.2 ஓவர்கள் வரை விளையாடிய தென்னாப்பிரிக்கா அணி 107 என்ற இலக்கை எடுத்து வெற்றி பெற்றது. தென் ஆப்பிரிக்கா அணியில் டாஸ்மின் பிரிட்ஸ் 42 ரன்களும், அன்னேக் போஷ் 25 ரன்களும் அதிகபட்சமாக எடுத்திருந்தனர்.
வங்கதேச அணியில் ஃபஹிமா கத்துன் 2 விக்கெட் கைப்பற்றி இருந்தார். இந்த வெற்றி மூலம் தென்னாப்பிரிக்க அணி புள்ளிப்பட்டியலில் 6 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருந்து வருகிறது. மேலும், இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் கிட்டத்தட்ட தென்னாப்பிரிக்க அணியின் அரை இறுதி வாய்ப்பு உறுதியாகி இருக்கிறது.