MI vs LSG: பவுலிங்கில் மிரட்டிய பும்ரா.., திணறிய லக்னோ.! மும்பை அணி அபார வெற்றி.!
மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறினார் ஜஸ்ப்ரித் பும்ரா.

மும்பை : மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் 2025 – இன் 45வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற லக்னோ கேப்டன் ரிஷப் பந்த் முதலில் பந்து வீச முடிவு செய்தார்.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 215 ரன்கள் எடுத்தது. மும்பை அணிக்காக ரியான் ரிக்கல்டன் (32 பந்துகளில் 58 ரன்கள்), சூர்யகுமார் யாதவ் (28 பந்துகளில் 54 ரன்கள்) அரைசதம் அடித்தனர்.
லக்னோ அணி தரப்பில் மயங்க் யாதவ், அவேஷ் கான் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர். பிரியன்ஸ் யாதவ், திக்வேஷ் ரதி, ரவி பிஷ்னோய் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். மூன்றாவது ஓவரில் ரோஹித்தை பெவிலியனுக்கு அனுப்பினார் மயங்க். ரிக்கல்டன் தனது இன்னிங்ஸில் 6 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களை விளாசி ஒன்பதாவது ஓவரில் அவுட் ஆனார். இரண்டாவது விக்கெட்டுக்கு வில் ஜாக்ஸுடன் (29) 55 ரன்கள் சேர்த்தார்.
திலக் வர்மா (6) மற்றும் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா (5) என்கிற சிங்கிள் டிஜிட் நம்பர்களில் வெளியேறினர். அறிமுக வீரர் கார்பின் போஷ் 10 பந்துகளில் 20 ரன்கள் எடுத்தார். நமன் தீர் 11 பந்துகளில் 25 ரன்களுடனும், தீபக் சாஹர் 1 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இறுதியை, 20 ஓவர்களில் மும்பை அணி 7 விக்கெட் இழப்புக்கு 215 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து, களமிறங்கிய லக்னோ அணி வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததால், அந்த அணி 20 ஓவர்களில் வெறும் 161 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
லக்னோ அணி சார்பாக அதிகமாக, ஆயுஷ் படோனி 35 ரன்களும், மிட்செல் மார்ஷ் 34 ரன்களும் எடுத்தனர். மும்பை அணிக்காக, ஜஸ்பிரித் பும்ரா நான்கு விக்கெட்டுகளுடன் மீண்டும் ஃபார்முக்கு திரும்பினார், டிரென்ட் போல்ட் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவர்களைத் தவிர, வில் ஜாக்ஸும் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
சொல்லப்போனால், ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார் ஜஸ்பிரித் பும்ரா. லக்னோ வீரர் ஏய்டன் மார்க்ரமின் விக்கெட்டை வீழ்த்திய போது இந்தச் சாதனையைப் படைத்தார்.
லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் 54 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி அபார வெற்றி அசத்தியிருக்கிறது. நடப்பு தொடரில் தொடர்ந்து 5வது வெற்றியை பதிவு செய்து சாதனை செய்திருக்கிறது. இந்த வெற்றியின் மூலம் 12 புள்ளிகளுடன் 2வது இடத்திற்கு முன்னேறியது மும்பை.