ஒரே போட்டியில் பல சாதனைகள் முறியடிப்பு… மாஸ் காட்டிய ராஜஸ்தான் அணி.!
ராஜஸ்தான் அணி நேற்று கொல்கத்தாவிற்கு எதிரான ஐபிஎல் போட்டியில், பல சாதனைகளை படைத்துள்ளது.
ஐபிஎல் தொடரில் விறுவிறுப்பான இறுதிக்கட்ட போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில் ஒவ்வொரு அணிகளும் பிளேஆப் வாய்ப்பை உறுதிசெய்யும் முனைப்பில் வெறிகொண்டு விளையாடிவருகிறது. இந்த நிலையில் நேற்று கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதின.
இதில் முதலில் பேட் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 149 ரன்கள் குவித்தது. இதையடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் அணியில் ஜெய்ஸ்வால் மற்றும் சாம்சன் அதிரடியால் 13.1 ஓவர்களிலேயே வெற்றி இலக்கை எட்டியது. இந்த போட்டியில் ராஜஸ்தான் அணியால் பல சாதனைகள் முறியடிக்கப்பட்டுள்ளன.
ராஜஸ்தான் அணிமுதல் ஓவரில் எந்த எக்ஸ்ட்ரா ரன்களும் இல்லாமல், பேட்ஸ்மேன்களால் அடிக்கப்பட்ட ரன்கள் மூலமாக 26 ரன்கள் குவித்து புதிய சாதனை படைத்துள்ளது. ஜெய்ஸ்வால் முதல் ஓவரில் 2 சிக்ஸர்கள், 3 போர்கள், மற்றும் 2 ரன்கள் அடித்தார். இதுவரை பெங்களூரு அணி 2019இல் ராஜஸ்தானுக்கு எதிராக முதல் ஓவரில் 23 ரன்கள் அடித்ததே சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதே போல் நடப்பு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணி 150 ரன்கள் இலக்கை அதிக பந்துகள் மீதம் வைத்து, அதாவது 41 பந்துகள் மீதமுள்ள நிலையில் வென்று சாதனை படைத்துள்ளது. மேலும் ராஜஸ்தான் அணி, இந்த வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
ராஜஸ்தான் அணி வீரர் சாஹல் இந்த போட்டியில் 4 விக்கெட்களை(4/25) எடுத்ததன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிக விக்கெட்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன்னதாக சென்னை அணி வீரர் பிராவோ 183 விக்கெட்கள் வீழ்த்தி இதில் முதலிடத்தில் இருந்தார், தற்போது சாஹல் 187 விக்கெட்களுடன் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.
மேலும் ராஜஸ்தான் அணி தொடக்கவீரர் ஜெய்ஸ்வால் அதிரடியாக விளையாடி 13 பந்துகளில் 7 போர்கள் மற்றும் 3 சிக்ஸர்கள் என அரைசதம் அடித்து ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக அரைசதம் அடித்த கே.எல்.ராகுலின்(14 பந்துகளில் அரைசதம்) என்ற சாதனையை முறியடித்துள்ளார்.