#Breaking:பாகிஸ்தானை 107 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய மகளிர் அணி அபார வெற்றி!
மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நியூசிலாந்தில் நடைபெற்று வரும் நிலையில்,மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் இன்று பிஸ்மாக் மரூப் தலைமையிலான பாகிஸ்தான் அணியை எதிர்கொண்டு விளையாடியது. இப்போட்டியானது நியூசிலாந்தின் மவுண்ட் மவுங்கானுயில் உள்ள பே ஓவல் மைதானத்தில் காலை முதல் நடைபெற்றது.
போட்டிக்கு முன்னதாக டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.இறுதியில்,50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு இந்திய அணி 244 ரன்கள் எடுத்தது.அதிகபட்சமாக,பூஜா 8 பவுண்டரியுடன் 67 ரன்கள் எடுத்துள்ளார்.சினே ராணா 53 ரன்கள்(*).
பாகிஸ்தான் அணியை பொறுத்தவரை அதிகபட்சமாக நிதா தர்,நஷ்ர சந்து ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகள் எடுத்தனர்.இதனைத் தொடர்ந்து,பாகிஸ்தான் அணிக்கு 245 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்ட நிலையில்,அணியின் தொடக்க வீரர்களாக சித்ரா அமீன்,ஜவேரியா கான் களமிறங்கினர்.
ஆனால்,ஜவேரியா கான் 11 ரன்களில் வெளியேற ,அடுத்து வந்த அணியின் கேப்டன் பிஸ்மா மரூஃப்பும் 15 ரன்களில் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார்.அவரைத் தொடர்ந்து,ஒமைமா சொஹைல் 5 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதனையடுத்து, நிதானமாக விளையாடி அணிக்கு ரன்கள் சேர்த்து கொண்டிருந்த சித்ரா அமீன் 3 பவுண்டரியுடன் 30 ரன்கள் எடுத்த நிலையில் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார்.அவரைத் தொடர்ந்து,களமிறங்கிய நிதா தார், அலியா ரியாஸ், பாத்திமா சனா உள்ளிட்டவர்களும் மிகச் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க 43 ஓவர் முடிவிலேயே 10 விக்கெட்டுகளை இழந்த பாகிஸ்தான் அணி 137 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.
இதனால்,மகளிர் உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணியை 107 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றுள்ளது.
இந்திய அணியைப் பொறுத்தவரை ராஜேஸ்வரி கயக்வாட் 4 விக்கெட்டுகளையும், சினே ராணா, ஜூலன் கோஸ்வாமி ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும் எடுத்துள்ளனர்.