பாக்சிங் டே டெஸ்ட் : திணறும் ஆஸ்திரேலியா! 200 விக்கெட்டுகளை கடந்து சாதித்த பும்ரா…
பாக்சிங் டே டெஸ்ட் 4வது நாளில் ஆஸ்திரேலியா அணி 165 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. டெஸ்ட் கிரிக்கெட்டில் 200 விக்கெட்களை கடந்துள்ளார் பும்ரா.
மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை நடந்த 3 டெஸ்ட் போட்டிகளில் 1-1 என சமநிலையில் இரு அணிகளும் உள்ளன . ஒரு போட்டி டிரா ஆனது.
4வது டெஸ்ட் போட்டி பாக்சிங் டே டெஸ்ட் போட்டியாக மெல்போர்ன் மைதானத்தில் டிசம்பர் 26ஆம் தேதி துவங்கியது. இன்று 4ஆம் நாள் ஆட்டம் நடைபெறுகிறது. முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா அணி 474 ரன்கள் குவித்தது. அதனை தொடர்ந்து ஆடிய இந்திய அணி 369 ரன்கள் எடுத்தது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மூத்த நட்சத்திர வீரர்களான கேப்டன் ரோஹித் சர்மா (3), விராட் கோலி (36), கே.எல்.ராகுல் (24) ரன்கள் மட்டுமே எடுத்தனர். 8வது விக்கெட்டில் களமிறங்கிய நிதிஷ் ரெட்டி 114 ரன்கள் அடித்தார். ஜெய்ஸ்வால் 82 ரன்களும், வாஷிங்டன் சுந்தர் 50 ரன்களும் எடுத்திருத்தனர்.
அதனை தொடர்ந்து இரண்டாவது இன்னிங்க்ஸை ஆடி வரும் ஆஸ்திரேலியா அணி, இந்திய அணி பந்துவீச்சை சமாளிக்க முடியாமல், குறிப்பாக பும்ராவின் யாக்கரை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்த விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
மார்னஸ் லாபுசாக்னே மட்டுமே 70 ரன்கள் விளாசினார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆகி வெளியேறி வருகின்றனர். இதுவரை 8 விக்கெட்டை இழந்து 165 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. பும்ரா இதுவரை 4 விக்கெட்டுகளையும், சிராஜ் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
பும்ரா இன்று இளம் வீரர் கான்ஸ்டாஸ் விக்கெட்டை வீழ்த்திய பிறகு 33.2வது ஓவர் பந்தில் டிராவில் ஹெட்டை வீழ்த்தி டெஸ்ட் போட்டியில் 200வது விக்கெட் வீழ்த்திய வீரர் என்ற பெருமையை பெற்றார். அதுவும் கிரிக்கெட் உலகில் குறைந்த பந்துவீச்சு சராசரியை கொண்டு சாதனை படைத்த வீரர் என்ற பெருமையை பும்ரா பெற்றுள்ளார்.
200வது விக்கெட்டை வீழ்த்துகையில் பும்ராவின் பந்துவீச்சு சராசரி 19.56 என்றும், இதற்கு முன்னர் 200வது விக்கெட்டை வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஜோயல் கார்னர் எடுக்கும் போது அவரது பந்துவீச்சு சராசரி 20.34 என்று இருந்ததே சாதனையாக கருதப்பட்டது. அதனை பும்ரா இன்று முறியடித்து, இதுவரை 202 டெஸ்ட் கிரிக்கெட் விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.