இந்திய அணியின் பந்து வீச்சு பயிற்சியாளர்! கம்பீர் ஆசையை நிறைவேற்றிய பிசிசிஐ?
சென்னை : கம்பீர் ஆசைப் பட்டத்தை போல, இந்திய அணியின் புதிய பந்து வீச்சு பயிற்சியாளராக தென்னாபிரிக்கா அணியின் முன்னாள் வீரரான மோர்னே மோர்கலை பிசிசிஐ நியமித்துள்ளது.
இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக ராகுல் ட்ராவிடுக்கு பிறகு இந்திய அணியின் முன்னாள் வீரரான கவுதம் கம்பீர் அண்மையில் பிசிசிஐ-யால் நியமிக்கப்பட்டிருந்தார். தற்போது இந்திய அணியின் புதிய பந்து வீச்சு பயிற்சியாளராக தென்னாபிரிக்கா அணியின் முன்னாள் வேக பந்து வீச்சாளரான மோர்னே மோர்கலை நியமனம் செய்துள்ளதாக பிசிசிஐ செயலாளரான ஜெய்ஷா சமீபத்தில் தனியார் பத்திரிகைக்கு அளித்த பேட்டி ஒன்றில் உறுதி செய்துள்ளார்.
அவர் பதவியேற்ற பிறகு அபிஷேக் நாயரை பேட்டிங் பயிற்சியாளராகவும், மோர்னே மோர்கல்லை பந்து வீச்சு பயிற்சியாளராகவும் வேண்டும் என பிசிசிஐக்கு தனது விருப்பத்தைத் தெரிவித்தார். ஐபிஎல் தொடரில் லக்னோ மற்றும் கொல்கத்தா அணியில் கம்பீருடன் இணைந்து இவர்கள் இருவரும் பயிற்சியாளராகச் செயல்பட்டனர்.
அதனால் அந்த ஒரு ‘கெமிஸ்ட்ரியை’ தொடர வேண்டும் என விரும்பிய கம்பீர் இந்த விருப்பத்தை பிசிசிஐ-யின் முன் வைத்தார். கம்பீரின் இந்த வேண்டுகோளுக்கு அப்போது பிசிசிஐ ஆலோசிப்பதாக தங்களது பதிலைத் தெரிவித்தது. அதற்குக் காரணம் இந்திய அணியின் பயிற்சியாளராக வெளிநாட்டு வீரர்கள் பணியாற்றி இருந்தாலும், பெரிதளவு தாக்கத்தை ஏற்படுத்தியதில்லை.
மேலும், பந்து வீச்சு பயிற்சியாளராக ஒரு வெளிநாட்டு வீரர் செயல்படுவதற்கு பிசிசிஐ உடனே ஒத்துக்கொள்ளாது. அதனைத் தொடர்ந்து ரசிகர்களும் அப்போது மோர்னே மோர்கல் தான் பந்து வீச்சு பயிற்சியாளராக நியமிக்கப் படுவார் எனக் கருத்துக்களைப் பகிர்ந்து வந்தனர். தற்போது, அதிகாரப்பூர்வ இந்த தகவலை வெளியிடவில்லை என்றாலும் ஜெய்ஷா சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் இது உறுதியாகி இருக்கிறது.