‘அவர்கள் இருவரும் உலக தரம் வாய்ந்த கிரிக்கெட் வீரர்கள்’..! முதல் செய்தியாளர் சந்திப்பில் பேசிய கவுதம் கம்பீர் ..!
கவுதம் கம்பீர் : இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமனம் செய்யப்பட்ட பிறகு முதல் முறையாக கவுதம் கம்பீர் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசி இருக்கிறார்.
நடைபெற்ற டி20 உலகக்கோப்பையுடன் முன்னாள் பயிற்சியாளரான ராகுல் ட்ராவிடின் பதவி காலம் முடிந்த நிலையில், அடுத்த தலைமை பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் வீரரான கவுதம் கம்பீரை பிசிசிஐ தேர்வு செய்தது. இவர் பயிற்சியாளராக பணியாற்ற போகும் முதல் தொடர் தான் இம்மாத இறுதியில் தொடங்கவிருக்கும் இலங்கை அணியுடனான சுற்று பயணத்தொடர் ஆகும். ஏற்கனவே இந்த சுற்று பயணத் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்திருந்தது.
ஆனால், அந்த அணியை பற்றி ரசிகர்கள், முன்னாள் வீரர்கள் என பல தரப்பினரிடம் பல கருத்துக்கள் எழுந்தது. இந்நிலையில், இன்று (ஜூலை-22) காலை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைமை தேர்வாளரான அஜித் அகர்கருடன், பயிற்சியாளராக தனது முதல் பத்திரிகையாளர் சந்திப்பில் கவுதம் கம்பீர் கலந்து கொண்டார். அந்த சந்திப்பில் கவுதம் கம்பீர் ரோஹித் மற்றும் விராட் கோலியை குறித்து பேசி இருந்தார்.
அவர் பேசுகையில், “டி20 உலகக் கோப்பையாக இருந்தாலும் சரி, 50 ஓவர் உலகக் கோப்பையாக இருந்தாலும் சரி, பெரிய போட்டியில் அவர்கள் எந்த அளவுக்கு பங்கை கொடுக்க முடியுமோ அந்த அளவிற்கு கொடுத்துள்ளனர் என்று நான் நினைக்கிறன்.அவர்கள் இருவருமே இன்னும் அதிக கிரிக்கெட்டுகள் விளையாட வேண்டும் என்பதே எனது ஆசை.
தற்போது, அதைவிட முக்கியமாக அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் சாம்பியன்ஸ் டிராபி 2025 மற்றும் ஆஸ்திரேலியா அணியுடன் ஒரு பெரிய சுற்று பயணத்தொடருக்கு அவர்கள் இந்திய அணிக்கு பெரிய அளவுக்கு ஒரு உந்துதலாக இருப்பார்கள். மேலும், வருகிற 2027-ம் ஆண்டில் நடைபெற இருக்கும் 50 ஓவர் உலகக்கோப்பை வரை இருவருமே உடற்தகுதி அவர்களுக்கு ஒத்துழைத்தால் கண்டிப்பாக விளையாடுவார்கள்.
மேற்கொண்டு அவர்கள் அணிக்காக எவ்வளவு ஆண்டுகள் பங்களிக்க முடியும் என்பது அவர்களின் தனிப்பட்ட விருப்பமாகும். அவர்கள் இருவரும் உலகத்தரம் வாய்ந்த கிரிக்கெட் வீரர்கள் ஆவார்கள். அதனால், எந்த அணியாக இருந்தாலும் அவர்கள் இருவரையும் எவ்வளவு ஆண்டுகள் விளையாட வைக்க முடியுமோ அவ்வளவு ஆண்டுகள் விளையாட வைப்பார்கள் என்பதை சந்தேகமில்லை”, என்று கூறி இருந்தார்.