டிராவை நோக்கி செல்லும் பார்டர் கவாஸ்கர் 3வது டெஸ்ட்! 4ஆம் நாளில் நிலைத்து நின்ற இந்திய அணி!
பார்டர் கவாஸ்கர் 3வது டெஸ்ட் போட்டியின் 4ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 193 ரன்கள் பின்தங்கியுள்ளது.
பிரிஸ்பேன் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. 2 போட்டிகள் நிறைவுற்ற நிலையில் 1-1 என இரு அணிகளும் சமநிலையில் உள்ள நிலையில் தற்போது நடைபெற்று வரும் 3வது டெஸ்ட் போட்டியானது டிராவை நோக்கி செல்கிறது.
இந்த டெஸ்ட் போட்டி ஆரம்பிக்கும் முன்னரே பிரிஸ்பேன் மைதானத்தில் 5 நாட்கள் மழைக்கு வாய்ப்புள்ள வானிலை நிலவுகிறது என அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் கூறிவிட்டது. அதற்கேற்றாற் போலவே தினமும், வானிலை குறிக்கிட்டு அந்த நாள் ஆட்டத்தை முழுதாக நிறைவு செய்ய முடியாத நிலையே நிலவுகிறது.
ஏற்கனவே, முதல் இன்னிங்ஸ் ஆடிய பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா அணி 445 ரன்கள் குவித்து. அடுத்து முதல் இன்னிங்ஸ் ஆடி வரும் இந்திய அணி ஆரம்பத்தில் சராசரவென விக்கெட்டுகளை இழந்தாலும், அனைத்து விக்கெட்களையும் விட்டுக்கொடுக்காமல் 4ஆம் நாள் ஆட்டம் வரையில் நிலைத்து நின்று வருகிறது.
இன்று 4ஆம் நாள் ஆட்டத்தில் போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தால் இன்றைய நாள் ஆட்டம் தற்போது நிறைவு பெற்றுள்ளது. இன்று வரையில் இந்திய அணி 9 விக்கெட்டுகளை இழந்து, 252 ரன்கள் வரை எடுத்துள்ளது. தற்போது களத்தில் பும்ப்ரா 10 ரன்களுடனும், ஆகாஷ் தீப் 27 ரன்களுடன் களத்தில் உள்ளனர். இதன் அடிப்படையில் 4ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை விட 193 ரன்கள் பின்தங்கியுள்ளது.
நாளை 5ஆம் நாள் ஆட்டத்தில் இந்திய அணி விக்கெட்டுகளை இழந்து, ஆஸ்திரேலிய அணி குறிப்பிட்ட ரன்கள் அடித்து டிக்ளேர் செய்து பிறகு, அதனை இந்திய அணி சேஸ் செய்ய முடியாமல் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தால் மட்டுமே ஆஸ்திரேலிய அணி வெற்றிபெறும். இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழக்காமல் நிலைத்து நின்று விட்டால் இந்த போட்டி டிராவில் முடிவடையும்.
இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 84 ரன்களும், ரவீந்திர ஜடேஜா 77 ரன்களும், எடுத்தனர். விராட் கோலி, ரோஹித் சர்மா உட்பட மற்ற அனைவரும் சொற்ப ரன்களில்அவுட் ஆகி வெளியேறியுள்ளனர். ஆஸ்திரேலியா அணி சார்பாக கேப்டன் கம்மின்ஸ் 4 விக்கெட்களையும், ஸ்டார்க் 3 விக்கெட்களையும், ஹசில்வுட், நாதன் லயன் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனர்.