ஆஸ்திரேலியாவுக்கு மிகப்பெரிய அடி.! சாம்பியன்ஸ் டிராபியில் கேப்டனுக்கு கேள்வி குறி.?
ஆஸ்திரேலிய அணி கேப்டன் பேட் கம்மின்ஸ் கணுக்கால் பிரச்னை காரணமாக, சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்பது சந்தேகம் எனக் கூறப்படுகிறது.

ஆஸ்திரேலியா : ஆஸ்திரேலிய அணியின் கேப்டனும் வேகப்பந்து வீச்சாளருமான பேட் கம்மின்ஸ் வருகின்ற பிப்ரவரி 19 ஆம் தேதி தொடங்கும் சாம்பியன்ஸ் டிராபிக்கு முழுமையாக உடல் தகுதி பெற வாய்ப்பில்லை என்று ஆஸ்திரேலிய தலைமை பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்ட் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ஸ்டீவ் ஸ்மித் அல்லது டிராவிஸ் ஹெட் ஆஸ்திரேலியாவை வழிநடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது நடந்தால், ஆஸ்திரேலிய அணி மற்றொரு பெரிய அடியை எதிர்கொள்ளும். அணியின் துணைத் தலைவர் மிட்செல் மார்ஷ் ஏற்கனவே காயம் காரணமாக விலகியுள்ளார்.
இப்படி இருக்கையில், அண்மையில் இரண்டாவது குழந்தை பிறந்ததால் இலங்கையில் நடந்த டெஸ்ட் தொடரில் விளையாடாத கம்மின்ஸ், கணுக்கால் காயத்தால் அவதிப்பட்டு வருகிறார். இன்னும் அடுத்த போட்டிக்கான பயிற்சியைத் தொடங்கவில்லை. நடந்து முடிந்த இந்தியாவிற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் இடையிலான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் டிராபியின் போது அவரது கணுக்கால் பிரச்சினை மேலும் மோசமடைந்தது.
இதனால், கம்மின்ஸ் சரியான நேரத்தில் உடல் தகுதி பெறவில்லை என்றால், ஸ்டீவ் ஸ்மித் அல்லது டிராவிஸ் ஹெட் ஆகியோருக்கு ஆஸ்திரேலியாவின் கேப்டன் பதவி வழங்கப்படலாம். முன்னதாக, முதுகு வலி காரணமாக அடுத்த மாதம் நடைபெறும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் இருந்து ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் மிட்செல் மார்ஷ் விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது, சாம்பியன்ஸ் டிராபிக்காக அறிவிக்கப்பட்ட அணிக்கு கம்மின்ஸே கேப்டன் என்றாலும், கடைசி நேரத்தில் அணியில் மாற்றம் இருக்கலாம் எனப்படுகிறது. ஆஸ்திரேலிய அணி இரண்டு முறை வெற்றி பெற்றுள்ளது. நடப்பு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஆஸ்திரேலியாவின் முதல் போட்டி பிப்ரவரி 22 அன்று லாகூரில் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெறுகிறது.