அனல் பறந்த புவனேஸ்வரன் பந்துவீச்சு..! விக்கெட்டுகளை இழந்த திருச்சி..46 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி..!

டிஎன்பிஎல் தொடரின் இன்றைய ITT vs Trichy போட்டியில், திருப்பூர் தமிழன்ஸ் அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
7-வது சீசன் டிஎன்பிஎல் தொடர் மிக விறுவிறுப்பாக நடைபெறுகிற நிலையில், இன்று நடைபெற்ற 17வது போட்டியில் ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் மற்றும் திருச்சி அணிகள் சேலத்தில் உள்ள எஸ்சிஎஃப் கிரிக்கெட் மைதானத்தில் மோதியது. இதில் டாஸ் வென்ற திருச்சி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதன்படி, முதலில் களமிறங்கிய திருப்பூர் அணியின் வீரர்கள் அபாரமாக விளையாடி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் குவித்தனர். இதில் சாய் கிஷோர் மற்றும் பால்சந்தர் அனிருத் அரைசதம் அடித்து அசத்தினர். அதன்பின், திருப்பூர் அணி நிர்ணயித்த 202 ரன்கள் இலக்குடன் திருச்சி அணி களமிறங்கியது.
தொடக்க ஆட்டக்காரர்களாக முதலில் களமிறங்கிய கங்கா ஸ்ரீதர் ராஜு, கே.ராஜ்குமார் அணிக்கு நல்லத் தொடக்கம் அமைத்துக் கொடுத்தனர். ஸ்ரீதர் ராஜு 20 ரன்களில் ஆட்டமிழக்க, மோனிஷ் ரன்கள் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். இவரையடுத்து, களமிறங்கிய டேரில் பெராரியோ பொறுப்பாக விளையாடினார்.
ராஜ்குமார் 22 ரன்கள் எடுத்து வெளியேற, பொறுப்பாக விளையாடிய பெராரியோ அரைசதத்தை தவறவிட்டு 42 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பிறகு, ஆண்டனி தாஸ், ஜாபர் ஜமால் நிதானமாக விளையாடி ரன்கள் சேர்த்த நிலையில், புவனேஸ்வரன் வீசிய பந்தில் தங்களது விக்கெட்டுகளை இழந்தனர்.
முடிவில், திருச்சி அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் திருப்பூர் தமிழன்ஸ் அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் அதிகபட்சமாக பெராரியோ 42 ரன்களும், ஜாபர் ஜமால் 30 ரன்களும், ஆண்டனி தாஸ் 25 ரன்களும் குவித்துள்ளனர். திருப்பூர் தமிழன்ஸ் அணியில் புவனேஸ்வரன் தனது அட்டகாசமான பந்துவீச்சால் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.