BGT2023: கோலி, அக்சர் பட்டேல் அதிரடி; முதல் இன்னிங்சில் வலுவான நிலையில் இந்தியா.!
இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான 4-வது டெஸ்டில் முதல் இன்னிங்சில் இந்தியா 571/9 ரன்கள் குவிப்பு.
இந்தியா-ஆஸ்திரேலியா இடையே நடந்து வரும் பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் 4-வது மற்றும் கடைசி போட்டி குஜராத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 480 ரன்கள் குவித்தது.
தொடக்க வீரராக களமிறங்கி இறுதி வரை அணியின் ஸ்கோரை உயர்த்தி சதமடித்த உஸ்மான் கவாஜா 180 ரன்கள் குவித்தார். அவரைப்போன்றே கேமரூன் க்ரீனும் (114 ரன்கள்) தனது முதல் சதமடித்தார். இந்தியா தரப்பில் அஸ்வின் 6 விக்கெட்களும், ஷமி 2 விக்கெட்களும் வீழ்த்தியிருந்தனர்.
இதனையடுத்து களமிறங்கிய இந்தியாவில் கேப்டன் ரோஹித் சர்மா 35 ரன்களில் ஆட்டமிழக்க, சுப்மன் கில் சதமடித்து(128 ரன்கள்) அசத்தினார். சிறப்பாக விளையாடிக்கொண்டிருந்த புஜாரா 42 ரன்னில் ஆட்டமிழக்க, ஜடேஜாவும் 28 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார்.
ஒருபுறம் விக்கெட்கள் விழ மற்றொரு புறம் விராட் கோலி நிலைத்து நின்று விளையாடி 3 ஆண்டுகளுக்கு பிறகு டெஸ்ட் போட்டிகளில் தனது 28-வது சதத்தை நிறைவு செய்தார். அரைசதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பரத் 44 ரன்களுக்கு அட்டமிழந்தார்.
அதன்பிறகு இறங்கிய அக்சர் படேல் அதிரடியாக விளையாடி 79 ரன்கள் குவித்து ஸ்டார்க் பந்தில் போல்டானார். மறுபுறம் விராட் கோலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்தியா முன்னிலை வகிக்க வித்திட்டார். இரட்டை சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கோலி 186 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
இந்தியா முதல் இன்னிங்சில் 9 விக்கெட் இழப்புக்கு 571 ரன்கள் குவித்துள்ளது. காயம் காரணமாக ஷ்ரேயஸ் ஐயர் களமிறங்காததால் இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. இந்திய அணி, ஆஸ்திரேலிய அணியை விட 91 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. ஆஸ்திரேலிய அணியில் நேதன் லயன் 3 விக்கெட்களும், மர்பி 3 விக்கெட்களும் வீழ்த்தியுள்ளனர்.