BGT தொடர் தோல்வி… ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் 3வது இடத்துக்கு தள்ளப்பட்ட இந்திய அணி!
BGT தொடரை இழந்த நிலையில் இந்திய அணி ஐசிசி டெஸ்ட் பட்டியலில் 2வது இடத்தில் இருந்து 3வது இடத்திற்கு சென்றது.
டெல்லி: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடரில் இந்திய கிரிக்கெட் அணி 1-3 என்ற கணக்கில் தோல்வியடைந்ததால், ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்தியா அணி மூன்றாவது இடத்திற்கு சென்றுள்ளது.
சிட்னியில் கடந்த ஜனவரி 5ம் தேதி முடிவடைந்த இந்த போட்டியில், தோல்வியடைந்ததன் மூலம் 10 ஆண்டுகளுக்குப் பிறகு பார்டர்-கவாஸ்கர் கோப்பையை இந்தியா தக்கவைக்கத் தவறியது. இந்தத் தொடரில் இந்திய அணி, பேட்டிங்கில் மிகவும் படு மோசமாக செயல்பட்டது.
அது தான் தோல்விக்கான முக்கிய காரணமாகவும் பார்க்கப்படுகிறது. தொடரில் தோல்வி அடைந்ததை தொடர்ந்து ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்தியா பின்னுக்கு சென்ற நிலையில், ஆஸ்ரேலியா 126 ரேட்டிங் புள்ளிகளுடன் முதலிடத்தைத் தக்க வைத்துக் கொண்டது.
தரவரிசையில் தென்னாப்பிரிக்கா அணி இரண்டாம் இடத்திற்கு முன்னேறிய நிலையில், மூன்றாவது இடத்திற்கு இந்தியா தள்ளப்பட்டது. தென்னாப்பிரிக்கா முன்னேறிய காரணம் பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் 2-0 என்ற கணக்கில் புதிய வெற்றியை பதிவு செய்தது தான்.
அதில் வெற்றிபெற்ற காரணத்தால் 112 ரேட்டிங் புள்ளிகளுடன் தரவரிசையில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியது. இந்தியா, 109 ரேட்டிங் புள்ளிகளில் நிலையாக இருந்தாலும், இப்போது தென்னாப்பிரிக்காவை விட மூன்று புள்ளிகள் பின்தங்கியுள்ளது.