பாகிஸ்தானுக்கு வாரி வழங்கிய பென் ஸ்டோக்ஸ்… வெள்ள நிவாரணத்திற்கு தன் சம்பளத்தை கொடுத்து அசத்தல்.!
பென் ஸ்டோக்ஸ், தனது சம்பளத்தை பாகிஸ்தான் வெள்ள நிவாரணத்திற்கு நன்கொடையாக வழங்குவதாக அறிவித்துள்ளார்.
இங்கிலாந்து டெஸ்ட் கேப்டன் பென் ஸ்டோக்ஸ், பாகிஸ்தான் வெள்ள நிவாரணத்திற்கு தனது முழு தொடரின் போட்டி கட்டணத்தை நன்கொடையாக வழங்குவதாக அறிவித்துள்ளார். இங்கிலாந்து அணி, 17 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக பாகிஸ்தானில் டெஸ்ட் தொடரை விளையாட வந்துள்ளது.
இந்த டெஸ்ட் தொடருக்கு முன்னதாக பென் ஸ்டோக்ஸ் தனது ட்விட்டரில், இந்த வரலாற்றுத் தொடருக்காக 17 ஆண்டுகளுக்குப் பிறகு டெஸ்ட் அணியாக மீண்டும் இங்கு வருவது மிகவும் உற்சாகமாக உள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் பாகிஸ்தானை நாசப்படுத்திய வெள்ளம், நாடு மற்றும் மக்கள் மீது குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியது குறித்து மிகவும் வருத்தமாக இருந்தது என்று கூறினார்.
மேலும் ஸ்டோக்ஸ் கூறியதாவது, விளையாட்டு எனது வாழ்க்கையில் எனக்கு நிறைய கொடுத்துள்ளது, கிரிக்கெட்டைத் தாண்டிய ஒன்றைத் திரும்பக் கொடுப்பதே சரியானது என்று நினைக்கிறேன். இந்த டெஸ்ட் தொடரிலிருந்து எனது போட்டிக் கட்டணத்தை பாகிஸ்தான் வெள்ளத்திற்கு நன்கொடையாக வழங்குவேன்.
இந்த நன்கொடை பாகிஸ்தானில் வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளை மீண்டும் உருவாக்க முடியும் என்று நம்புகிறோம், என்று ஸ்டோக்ஸ் மேலும் கூறினார். 2005ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல்முறையாக டெஸ்ட் தொடர்களில் விளையாடுவதற்காக இங்கிலாந்து கிரிக்கெட் அணி, பாகிஸ்தானுக்கு வந்துள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் ஒரு பகுதியாக நடைபெறும் இந்த டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியில் டிசம்பர் 1 ஆம் தேதி தொடங்குகிறது. 2வது போட்டி முல்தானில் டிச-9 ஆம் தேதியும், 3வது போட்டி கராச்சியில் டிச-17 ஆம் தேதியும் நடைபெறுகிறது.
I’m donating my match fees from this Test series to the Pakistan Flood appeal ❤️???????? pic.twitter.com/BgvY0VQ2GG
— Ben Stokes (@benstokes38) November 28, 2022
இங்கிலாந்து அணி: பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜேம்ஸ் ஆண்டர்சன், ஹாரி புரூக், ஜாக் க்ராலி, பென் டக்கெட், பென் ஃபோக்ஸ், வில் ஜாக்ஸ், கீட்டன் ஜென்னிங்ஸ், ஜாக் லீச், லியாம் லிவிங்ஸ்டோன், ஜேமி ஓவர்டன், ஆலி போப், ஆலி ராபின்சன், ஜோ ரூட், மார்க் வுட் , ரெஹான் அகமது.