“அடிச்சி நொறுக்குவேன்..,” சொன்ன சம்பவத்தை செய்து காட்டிய இளம் வீரர் வைபவ்!
நேற்று ராஜஸ்தான் - குஜராத் அணிகளுக்கு இடையேயான போட்டி தொடங்கும் முன்னர் RR வீரர் வைபவ், நான் பந்துகளை அடித்து நொறுக்க போகிறேன் என கூறிவிட்டு களத்தில் இறங்கியுள்ளார்.

ஜெய்ப்பூர் : பீகாரில் இருந்து வந்த 14 வயது சின்ன பையன் வைபவ் சூர்யவன்சி நேற்று ஐபிஎல் போட்டியில் செய்த சம்பவம் இன்று உலக அரங்கில் பேசு பொருளாக மாறியுள்ளது. 18 வருட ஐபிஎல்-ல் அதிவேக 100 அடித்த முதல் இந்தியர் என்ற ஆகப்பெரும் சாதனையை நேற்று அசால்டாக செய்து காட்டிவிட்டார் வைபவ். ஐபிஎல்-ல் 2வது அதிவேக 100 என்ற சாதனையும் இவர் பெற்று விட்டார். சர்வதேச டி20 போட்டி தொடர்களில் இளம் வயதில் 100 அடித்த வீரர் என்பது உட்பட பல சாதனைகளை அடித்து நொறுக்கிவிட்டார் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இளம் வீரர் வைபவ்.
நேற்றைய போட்டியில் மட்டுமல்ல லக்னோ அணிக்கு எதிரான தனது முதல் போட்டியிலேயே தான் எதிர்கொண்ட முதல் பந்தை சிக்சருக்கு விளாசி தனது ஐபிஎல் சாதனைகளுக்கு விதை போட ஆரம்பித்தார் வைபவ். ஆவேஷ் கான் வீசிய முதல் பந்தை சிக்சருக்கு தூக்கிய வைபவ் அந்த போட்டியில் 20 பந்தில் 34 ரன்கள் அடித்து அவுட் ஆகி வெளியேறும் போது லேசான கண்ணீருடன் மைதானத்தை விட்டு வெளியேறினார்.
ஆனால், அடுத்த போட்டியில் சிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவரான புவனேஷ்வர் குமார் பந்துவீச்சில் 2 சிக்ஸர்களை பறக்கவிட்டு அவர் பந்திலேயே அவுட் ஆகி வெளியேறினார். அதன் பிறகு நேற்று 3வது ஐபிஎல் போட்டியில் களமிறங்கிய வைபவ் 38 பந்தில் 7 பவுண்டரி, 11 சிக்ஸர்கள் என விளாசி 101 ரன்களை எடுத்தார் வைபவ் சூர்யவன்ஷி.
நேற்று போட்டி தொடங்கும் முன்னர் தனது சிறுவயது பயிற்சியாளர் மனிஷ் ஓஜாவிடம் பேசுகையில், “நான் இன்றைய போட்டியில் பந்துகளை அடித்து நொறுக்க போகிறேன். ” என முன்னரே கூறிவிட்டு தான் களத்தில் இறங்கியுள்ளார். அதற்கு அந்த பயிற்சியாளர், “பந்தை பார்த்து விளையாடு, பொறுமையாக இரு. ஜெய்ஸ்வால் உடன் பேசு. அவர் கூறுவதை கேள்.” என கூறியுள்ளார்.
தான் சொன்னபடி, குஜராத் டைட்டன்ஸ் வீரர்கள் வீசிய பந்துகளை அடித்து நொறுக்கியுள்ளார் வைபவ். ஆனால், ஐபிஎல் தனது முதல் பந்தை சந்திக்கும் முன்னரே, ” முதல் போட்டியில், முதல் பந்தில் யாரவது சிக்ஸர் அடித்து இருக்கிறார்களா? ” எனக் கேட்டு பயிற்சியாளரை அதிர வைத்துள்ளார் வைபவ். பிறகு அதனை களத்தில் செய்து காட்டினார் வைபவ்.