இனி இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகள் கிடையாது! பிசிசிஐ அதிரடி முடிவு!
பஹல்காம் தாக்குதலை அடுத்து இனி இந்தியா - பாகிஸ்தான் இருதரப்பு கிரிக்கெட் போட்டிகள் நடைபெறாது என பிசிசிஐ துணை தலைவர் தெரிவித்துள்ளார்.

டெல்லி : நேற்று முன்தினம் (ஏப்ரல் 22) காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா – பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே பல்வேறு அதிரடி தடை நடவடிக்கைகள் தொடர்ந்து வருகின்றன.
ஏற்கனவே இருநாட்டு வணிகம், தூதரக உறவுகள், எல்லை பங்கீடுகளில் பல்வேறு தடை மற்றும் எதிர்ப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து வரும் நிலையில், தற்போது கிரிக்கெட் விளையாட்டு போட்டியிலும் இருநாட்டு பகை எதிரொலிக்கிறது.
பஹல்காம் தாக்குதல் குறித்து பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா கூறுகையில், ” தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுடன் நாங்கள் உடன் இருக்கிறோம், அத்தாக்குதலை நாங்கள் கண்டிக்கிறோம். எங்கள் அரசாங்கம் என்ன சொன்னாலும், நாங்கள் அதனை செய்வோம்.
ஏற்கனவே அரசாங்கத்தின் நிலைப்பாடு காரணமாக நாங்கள் பாகிஸ்தானுடன் இருதரப்பு தொடர்களில் விளையாடுவதில்லை. அதேபோல, இனிவரும் காலங்களிலும் பாகிஸ்தானுடன் இருதரப்பு போட்டிகளில் விளையாட மாட்டோம். ஆனால், ஐசிசி போட்டிகளை பொறுத்தவரை ஐசிசி ஈடுபாட்டின் காரணமாக நாங்கள் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிகளில் விளையாடுகிறோம். இங்கு என்ன நடக்கிறது என்பது ஐசிசிக்கு நன்றாக தெரியும் எனக் கூறினார்.
முன்னதாக பாகிஸ்தான் அணி 2012 – 2013 ஆண்டில் இருதரப்பு போட்டியில் விளையாட இந்தியா வந்தது. அதற்கு முன்னர் 2008ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு இந்திய கிரிக்கெட் அணி சென்று விளையாடி இருந்தத குறிப்பிடத்தக்கது.