ஐபிஎல் 2025 : மெகா ஏலம் எப்போது? லண்டனை தொடர்ந்து சவுதியை குறிவைக்கும் பிசிசிஐ?
சவூதி அரேபிய நகரங்களான ரியாத் மற்றும் ஜெட்டா ஆகிய இடங்களில் இந்த ஐபிஎல் ஏலத்திற்கான பரிசீலனையில் இருப்பதாக கூறப்படுகிறது.
சென்னை : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்தை இந்தாண்டு நவம்பர் மாதம் கடைசி வாரத்தில் இரு நாட்கள் நடத்த பிசிசிஐ திட்டமிட்டு வருகிறது. மெகா ஏலம் நடைபெற இன்னும் 1 மாதம் இருப்பதால் இன்னும் வரை எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் பிசிசிஐ வெளியிடவில்லை. சமீபத்தில், இந்த ஐபிஎல் மெகா ஏலத்திற்கான விதிகளை மட்டுமே பிசிசிஐ வெளியிட்டிருந்தது.
அதுவும் சில விதிகள் முரண்பாடாக இருப்பதால் ஒருசில அணிகள் பிச்சியிடம் அந்த விதியை மாற்றியமைக்க வேண்டுமென கோரிக்கை விடுத்ததாகவும் ஒரு சில தகவல் தெரியவந்தது. இது ஒரு புறம் இருக்க, இந்த மெகா ஏலத்தை நடத்துவதற்கான திட்டத்தில் தற்போது பிசிசிஐ இறங்கி இருக்கிறது.
அதன்படி, முதலில் லண்டன் நகரில் இந்த ஏலத்தை நடத்த திட்டமிட்டபோது, கடுமையான பனிப் பொழிவு இருக்கும் என்பதால் அத்திட்டம் கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், அதற்கு பதிலாக, சவூதி அரேபிய நகரங்களான ரியாத் மற்றும் ஜெட்டா ஆகிய இடங்களில் இந்த ஐபிஎல் ஏலத்திற்கான பரிசீலனையில் இருப்பதாக கூறப்படுகிறது.
இதற்கு முன்னதாக கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின் மினி ஏலம் என்பது துபாயில்நடத்தப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு நவம்பரில் மார்க்யூ மெகா ஏலம் நடைபெற உள்ளதால், பிசிசிஐ 2 நாட்கள் இந்த பெரிய ஏலத்தை நடத்துவதற்கு பொருத்தமான இடத்தைத் தேடுகிறது,
பெர்த்தில் நடைபெறவுள்ள இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான பார்டர் கவாஸ்கர் கோப்பையின் முதல் டெஸ்ட் போட்டியைத் தொடர்ந்து அந்த மாதம் அதாவது நவம்பர் மாத கடைசி வாரத்தில் இந்த ஏலம் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.