சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணி ரெடி… இன்று மதியம் அறிவிக்கும் பிசிசிஐ!
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்கள் குறித்து இன்று அறிவிக்கப்பட உள்ளது.
டெல்லி: இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் மற்றும் சாம்பியன்ஸ் டிராஃபி கோப்பைக்கான இந்திய அணியை கேப்டன் ரோஹித் ஷர்மா, தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் ஆகியோர் இன்று மதியம் அறிவிக்க உள்ளனர்.
கேப்டன் ரோகித் சர்மா மற்றும் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் இன்று மதியம் 12:30 மணி அளவில் செய்தியாளர் சந்திப்பின்போது, இந்திய அணியை அறிவிக்கவுள்ளனர். இந்தியா, பாகிஸ்தான் அணிகளை தவிர, மற்ற அணிகள் தங்களது அணிகளை ஏற்கெனவே அறிவித்து விட்டன.
இன்று மதியம் நடைபெறும் செய்தியாளர்கள் சந்திப்பின்போது, பிப்ரவரி 3 ஆம் தேதி தொடங்கும் இங்கிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான அணியும் அறிவிக்கப்படுகிறது. பிப்ரவரி 19ஆம் தேதி சாம்பியன்ஸ் டிராஃபி போட்டிகள் தொடங்கவுள்ளன. 19 முதல் தொடங்கும் இந்த சாம்பியன்ஸ் டிராபி போட்டி மார்ச் 9 வரை பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள மூன்று மைதானங்களில் நடைபெற உள்ளது.
அதாவது, இந்திய அணிக்கான போட்டிகள் தவிர்த்து, மற்ற போட்டிகள் அனைத்தும் பாகிஸ்தானில் நடைபெற உள்ளன. இந்திய அணிக்கான போட்டிகள் மட்டும் துபையில் நடத்தப்படுகிறது. இந்த நிலையில், இந்திய அணியில் விராட் கோலி, ரோஹித் சர்மா மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் இடம்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில், பும்ராவும் இடம்பெற வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், பும்ரா தசைப் பிடிப்பால் அவதிப்பட்டு வரும் நிலையில், போட்டியில் பங்கேற்பது அவரது உடற்தகுதி பொறுத்து தான் தெரிய வரும் கூறப்படுகிறது. எது என்னவோ, நடைபெறவிருக்கும் சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியிலும் எந்தெந்த வீரர்கள் இடம்பெறப் போகிறார்கள் என்பது இன்று நடக்கவிருக்கும் தேர்வுக்குழு கூட்டம் முடிந்த பிறகே தெரிந்து விடும்.