இந்திய அணி வீரர்களுக்கு பி.சி.சி.ஐயின் முக்கிய அறிவுரை …!
இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி வீரர்களுக்கு பி.சி.சி.ஐ செயலாளர் ஜெய் ஷா கடிதம் வாயிலாக அறிவுரை வழங்கியுள்ளார்.
கேப்டன் விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொள்வதற்காக இங்கிலாந்துக்கு சென்றது.அதன்பின்னர்,போட்டியில் இந்திய அணியானது தோல்வியை தழுவியது.
இதனையடுத்து,5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி விளையாடவுள்ள நிலையில்,இதன் முதல் டெஸ்ட் போட்டியானது ஆகஸ்ட் மாதம் 4 ஆம் தேதி தொடங்குகிறது.
தற்போது நடைபெற்று வரும் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் 23 இந்திய கிரிக்கெட் வீரர்களில் ஒருவருக்கு,20 நாள் இடைவேளையின் போது மேற்கொள்ளப்பட்ட சோதனையில் கொரோனா பாசிடிவ் என வந்துள்ளது.இதனால்,அவர் டர்ஹாமிற்கு இந்திய அணியுடன் பயணம் செய்ய மாட்டார்.
அடுத்த மாதம் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன்னதாக டர்ஹாமில் ஒரு உயிர் குமிழியில் மீண்டும் ஒன்றிணைக்கப்பட உள்ளது. கடந்த மாதம் நியூசிலாந்திற்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பிற்குப் பிறகு வீரர்களுக்கு இந்த இடைவெளி வழங்கப்பட்டது.
இதுகுறித்து,பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா கூறுகையில்:”ஆமாம், ஒரு வீரருக்கு கொரோனா பாசிடிவ் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் அவர் கடந்த எட்டு நாட்களாக தனிமையில் இருக்கிறார். அவர் அணியுடன் எந்த ஹோட்டலிலும் தங்கவில்லை, எனவே வேறு எந்த வீரரும் பாதிக்கப்படவில்லை. ஆனால் என்னால் அந்த வீரரின் பெயரை வெளியிட முடியாது”,என்று தெரிவித்தார்.
மேலும்,”இப்போதைக்கு வேறு எந்த வீரரும் கொரோனாவால் பாதிக்கப்படவில்லை.எனினும்,எங்கள் செயலாளர் ஜெய் ஷா அனைத்து வீரர்களுக்கும் கொரோனா நெறிமுறைகளைப் பராமரிக்க ஒரு கடிதம் எழுதியுள்ளார் என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும்” என்று சுக்லா கூறினார்.
அதன்படி,பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா,இந்திய அணி வீரர்களுக்கு எழுதிய தனது கடிதத்தில்,”அணிக்கு வழங்கப்பட்ட கோவிஷீல்ட் தடுப்பூசி, வைரஸை எதிர்க்கும் முழு நோய் எதிர்ப்பு சக்தியல்ல,ஆனால்,பாதுகாப்பை மட்டுமே வழங்குகிறது என்பதால்,நெரிசலான இடங்களை தவிர்க்க வேண்டும்”,என்று அறிவுறுத்தியுள்ளார்.
உண்மையில்,ஷாவின் கடிதம் குறிப்பாக விம்பிள்டன் மற்றும் யூரோ சாம்பியன்ஷிப்பிற்கு இந்திய கிரிக்கெட் வீரர்கள் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தது.
எவ்வாறாயினும்,கொரோனா பாதித்த வீரர் இந்திய அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பந்த் என்று பி.சி.சி.ஐ வட்டாரங்கள் தெரிவித்தன.