இந்திய வீரர்களுக்கு ‘ஹேப்பி’ நியூஸ்! மனைவிகளை அழைத்து செல்லலாம்.., ஒரு கண்டிஷன்?
சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு இந்திய வீரர்கள் தங்கள் குடும்பத்தினரை ஒரே ஒரு போட்டிக்கு அழைத்து செல்ல பிசிசிஐ அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டெல்லி : நாளை முதல் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான கிரிக்கெட் போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் முதல் போட்டியானது நாளை கராச்சி மைதானத்தில் பாகிஸ்தான் – நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இந்திய அணி பங்கேற்கும் அனைத்து போட்டிகளும் துபாய் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது.
இந்த தொடருக்கு முன்னதாக நடைபெற்ற டெஸ்ட் தொடரான பார்டர் கவாஸ்கர் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணி மோசமான தோல்வியை தழுவியது. இதனை அடுத்து பிசிசிஐ-ல் பல்வேறு கடும் விதிமுறைகள் விதிக்கப்பட்டன. சர்வதேச போட்டிகள் இல்லாத சமயத்தில் இந்திய அணி வீரர்கள் கண்டிப்பாக உள்ளூர் போட்டிகளில் விளையாட வேண்டும். வீரர்கள் அனைவரும் ஒன்றாக தான் பயணிக்க வேண்டும் உட்பட வீரர்கள் தங்கள் மனைவிகளை உடன் அழைத்து செல்வதிலும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.
இந்தியாவுக்கு வெளியே 45 நாட்களுக்கு மேலான சுற்றுப்பயணம் என்றால் மட்டும் வீரர்கள் தங்கள் மனைவிகளை அல்லது குடும்பத்தினரை அழைத்து செல்ல அனுமதிக்கப்படுவர் என விதிமுறை விதிக்கப்பட்டு இருந்தது. இதனால் துபாயில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி வீரர்கள் தங்கள் மனைவிகளை அழைத்து செல்ல முடியாத நிலை இருந்தது.
இப்படியான சூழலில் தனியார் செய்தி நிறுவனம் (ஜாக்ரன்) வெளியிட்ட செய்தியின்படி, வீரர்கள் தங்கள் மனைவிகளை அழைத்து செல்வதில் ஒரு கட்டுப்பாட்டை பிசிசிஐ தளர்த்தி கொண்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு மனைவி உள்ளிட்ட அனுமதிக்கப்பட்ட குடும்பத்தினரை அழைத்து செல்லலாம். ஆனால், எல்லா போட்டிகளுக்கும் அவர்களை மைதானத்திற்கு அழைத்து வர முடியாது. ஏதேனும் ஒரு போட்டிக்கு அவர்களை அழைத்து செல்லலாம் என விதிகள் தளர்த்தப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
வீரர்கள் தங்களுக்குள் கலந்துரையாடி எந்த போட்டியை குடும்பத்தினர் பார்க்க வேண்டும் என தீர்மானித்து அதனை பிசிசிஐ-யிடம் கோரிக்கையாக முன்வைக்க வேண்டும் எனவும் அந்த செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.